இமயமலையில் திடீர் பனிப்பாறை சரிவால் திபெத், நேபாளம் இரண்டிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக சீன தூதரகம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதேசமயம், எதிர்கால பேரிடர்களைத் தவிர்க்க சீனா–நேபாளம் இணைந்து வானிலை, ஆற்று நீர்மட்ட தகவல்களை விரைவாக பகிரும் தனி அமைப்பு உருவாக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலக வெப்பமயமால் பனிப்பாறை அபாயம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்திய துணை கண்டம், ஆசிய துணை கண்டத்துடன் மோதியதால் உலகின் உயரமான மலை தொடரான இமயமலை தொடர் உருவானது. இந்தியா, நேபாளம், பூடான், சீனா, பாகிஸ்தான் வரை பரந்து விரிந்துள்ள இந்த இமயமலை தொடரில் ஏராளமான பனி பாறைகள் அமைந்துள்ளன.
சமீப காலத்தில் உலக வெப்பமயம் காரணமாக இந்த பனி பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று தனது கடின தன்மையை இழந்து உடைந்தது. இதனால் அதிலிருந்த பெரிய அளவிலான நீர் அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றின் வழியாக நேபாளத்துக்குள் பாய்ந்தது.
சுனாமி வேகத்தில் வந்த இந்த பெரு வெள்ளத்தால் நேபாளத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பேரழிவுக்கு சீனாவே காரணம் என நேபாளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் பனிப்பாறை உடைந்து சில மணி நேரங்களுக்குப் பிறகே பெருவெள்ளம் நேபாள எல்லைக்குள் பாய்ந்துள்ளது. சீனா, ஆற்று நீர்மட்டம் உயர்ந்தது குறித்த தகவலை உடனுக்குடன் நேபாளத்திற்கு அனுப்பியிருந்தால், தாழ்வான பகுதி மக்களை முன்கூட்டியே வெளியேற்றி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என 'நேபாள பத்திரிகையாளர் கூட்டமைப்பு' குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனாவுக்கு எதிரான வெறுப்பு நேபாளத்தில் அதிகரித்துள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை காட்மாண்டுவில் உள்ள சீனத் தூதரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்த தவறு சீனாவால் ஏற்பட்டது அல்ல என்றும், இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் நேபாளத்தை போல திபெத் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.
அதே நேரம் இந்த பேரழிவை தொடர்ந்து சீனா மற்றும் நேபாளம் இடையே இமயமலை பகுதியில் ஏற்படும் வானிலை நிலவரங்களை விரைவாக பகிர்ந்துகொள்ள தனி அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளதாக சீனா மற்றும் நேபாள அதிகாரிகள் கூறியுள்ளனர்.