கடும் போராட்டங்கள் மற்றும் வன்முறைக்குப் பிறகு, நேபாள அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்குவதாக அறிவித்தது.
நேபாளத்தில் செயல்படும் சமூக ஊடக தளங்கள், நாட்டிற்குள்ளோ அல்லது வெளிநாட்டிலோ பதிவு செய்யுமாறு அரசாங்கம் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால், உரிமம் பெறாமலாயே சில தளங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், உரிமம் பெறாத தளங்கள் சட்டப்பூர்வ அனுமதியின்றி விளம்பரங்களையும் உள்ளடக்கத்தையும் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதை உறுதி செய்யவும் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, நேபாளத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசு வலியுறுத்தியிருந்தது. மேலும், அதற்காக 7 நாட்கள் கெடு விதித்திருந்தது.
இதில், ஒருசில வலைதளங்களைத் தவிர Gmail, Facebook, Messenger, Instagram, YouTube, WhatsApp, Twitter, LinkedIn, Snapchat, Reddit, Discord, Pinterest, Signal, Threads, WeChat, Quora, Tumblr, Clubhouse, Rumble, Mi Video, Mi Vike, Line, Imo, Jalo, Sol, மற்றும் Hamro Patro உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக ஊடகங்களும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அவைகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. இது, அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பொதுமக்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்தத் தடையால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 பேர் உயிரிழந்தனர். இதனிடையே போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைய முயன்றதால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டத்திற்கு திரைத்துறையினர், பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்ததால், நிலைமை கட்டுக்கடங்காமல் மாறியது.
மக்களின் போராட்டம் கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், நேபாள தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்கிவிட்டதாக அறிவித்தார். மேலும், இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக ஊடகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டங்களை நிறுத்தும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார். மறுபுறம், நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த தவறியதாக கூறி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக், தனது பதவியில் இருந்து விலகினார்.