nepal  x page
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு.. போக்குவரத்து நெரிசல்.. நேபாள அரசு எடுத்த திடீர் முடிவு!

உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், எரிபொருளைச் சேமிக்கும் வகையில், அதற்கான திட்டங்களை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளன.

Prakash J

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய சூழலில் நேபாள அரசு திடீரென ஒரு முடிவு எடுத்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருந்துவருகிறது. இதற்கிடையே, 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், எரிபொருளைச் சேமிக்கும் வகையில், அதற்கான திட்டங்களை உலக நாடுகள் கையில் எடுத்துள்ளன. இந்திய பிரதமர் மோடிகூட, தனது பாதுகாப்பு வாகனங்களைப் பாதியாகக் குறைத்துள்ளார். மேலும், பொதுப் போக்குவரத்தில் செல்ல அறிவுரை வழங்கியுள்ளார். அந்த வகையில், அண்டை நாடான நேபாளமும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து வகையான பொதுப் போக்குவரத்து வாகனங்களின் புதிய பதிவுகளை நிறுத்த நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

எரிபொருள் விநியோக நெருக்கடி, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சாலை உள்கட்டமைப்பின் மீதான அதிகரித்து வரும் அழுத்தம் ஆகியவை காரணமாக, பாலன் ஷா தலைமையிலான புதிய அரசு, இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசின் உத்தரவுப்படி, நாட்டில் உள்ள ஏழு மாகாணங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் புதிய பதிவுகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், மின்சாரப் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசின் இத்தகைய முடிவு, அதாவது, மின்சாரப் பொது வாகனங்களும் இந்தக் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் விவாதங்களை எழுப்பியுள்ளது.