E. இந்து
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு(IAF) உடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நடத்தும் உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடு (Global Space Exploration Conference) மே 7 தொடங்கி மே 9 வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக GLEX மாநாடு தற்போது நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற GLEX மாநாட்டில் நாசா பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் ஏறத்தாழ 35 நாடுகள் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், 1,700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், இம்மாநாட்டில் NASA -வின் விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கு அமெரிக்க அரசு நாசாவின் பட்ஜெட்டை 24.3% வரை குறைத்திருப்பதுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட் குறைப்பு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடைபெற்று வருவதால் நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் GLEX மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் நாசா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான மோதலும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற போது நாசாவின் பட்ஜெட் குறைக்கப்பட்டதால், பல விண்வெளி ஒப்பந்தங்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காதது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாராயாணனிடம் கேட்டப்போது, தனிப்பட்ட விண்வெளி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.