”பூமி அதிரும் ஓர் அறிவிப்பு” - விரைவில் ட்ரம்பின் அடுத்த அதிரடி.. பதற்றத்தில் நாடுகள்!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாடு தவிர்த்து உலக நாடுகளையும் நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறார். குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, பாஸ்போர்ட் கெடுபிடி, நிதியுதவி நிறுத்தம், ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகள் அவற்றுள் அடக்கம். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், பூமியை அதிரவைக்கும் வகையிலான ஓர் அறிவிப்பை இன்னும் சில நாள்களில் வெளியிடவிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருப்பது உலக நாடுகளை மேலும் பதற்றத்தில் தள்ளியுள்ளது.
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னியும் அதிபர் ட்ரம்ப்வும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டொனால்டு ட்ரம்ப், அடுத்த ஒருசில நாள்களில், பூமியை அதிரவைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாகக் கூறினார். அது வணிகம் தொடர்பான அறிவிப்பு அல்ல என்று தெளிவுபடுத்திய அவர், அதைத் தவிர்த்து வேறு ஒரு விஷயம் எனத் தெரிவித்துள்ளார். “எனினும், அது நிச்சயம் அது பூமியை அதிரவைக்கும் அறிவிப்பாக இருக்கும். இது, நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தவிருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அவரது அறிக்கை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பயனர்கள் பலரும் கருத்துகளப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் உலக நாடுகளும் பதற்றத்தில் உள்ளன.