Strait of Hormuz attack ANI
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் மர்ம தாக்குதல்! மீண்டும் முற்றுகிறதா போர்? யார் தாக்கினார்கள்?

சமீப நாட்களாக நாளுக்கொரு திருப்பத்தை கொடுத்து வந்தது அமெரிக்கா - ஈரான் மோதல். அது தற்போது ஒரு முக்கிய முக்கிய புள்ளியில் உச்சத்தை எட்டி பரபரப்பை அதிகரித்துள்ளது. அது என்னவென்றால் ஹோர்முஸ் நீரிணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே.

PT WEB

ஓமன் கடற்கரையருகே ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத ஆயுதத்தால் தாக்குதல் நடந்தது. UKMTO, Ambrey தகவலின்படி கப்பல் சேதமடைந்தது; ஆனால் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. உலக எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த நீரிணையில் ஈரான்-அமெரிக்கா பதற்றம், பேச்சுவார்த்தை குழப்பம், புதிய ரூட் ஆலோசனை ஆகியவை பிராந்திய பாதுகாப்பு அச்சத்தை அதிகரிக்கின்றன.

ஓமன் கடற்கரையையொட்டிய ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சரக்கு கப்பல் மீது மர்ம ஆயுதம் தாக்கியதாக பிரிட்டனின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளையில், அமெரிக்காவும் ஈரானும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்பது குறித்து முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன.

பிரிட்டனின் UKMTO அதாவது United Kingdom Maritime Trade Operations அமைப்பின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், ஓமனின் அல் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் சென்ற சரக்கு கப்பல், 'அடையாளம் தெரியாத ஆயுதத்தால்' தாக்கப்பட்டது. கப்பல் சேதமடைந்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் Ambrey தெரிவித்துள்ளது. எனினும், கப்பலின் பெயர், அது எந்த நாட்டின் கொடியுடன் இயங்கியது அல்லது என்ன சரக்குகளை ஏற்றிச் சென்றது என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

Strait of Hormuz attack

பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை, உலகின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழித்தடமாக இருக்கிறது. போர் தொடங்குவதற்கு முன்பு உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு, ஈரானின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளை ஏற்று கடந்த வாரம் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் முடிவை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.

Strait of Hormuz attack

ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, ஓமனுடன் மட்டும் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கான புதிய வழித்தடம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையின்றி வணிகக் கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து ஈரானை வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனது கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து ஈரானின் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெஹ்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால கப்பல் போக்குவரத்து குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.