கென்யா எக்ஸ் தளம்
உலகம்

கென்யா | வானில் இருந்து விழுந்த 500 கிலோ மெட்டல் ரிங்.. ஆய்வில் வெளிவந்த விண்வெளி தகவல்!

கென்யா கிராமம் ஒன்றில் சுமார் 500 கிலோ எடையுள்ள வானில் இருந்து விழுந்த குப்பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Prakash J

தெற்கு கென்யாவின் மகுவேனி கவுண்டியில் உள்ள முக்குகு என்ற கிராமத்தில் சுமார் 2.5 மீட்டர் விட்டம் (8 அடி) மற்றும் 500 கிலோ எடையுள்ள மெட்டல் வளையம் ஒன்று வானிலிருந்து விழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி விழுந்த இந்த வளையத்தால் கிராம மக்கள் பயந்துபோய் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கென்யா ஸ்பேஸ் ஏஜென்சி (KSA) அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வளையம் விழுந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். மேலும் ஆய்வாளர் சென்று அந்த வளையத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது விண்வெளிக் குப்பை எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், அது ராக்கெட்டின் பிரிப்பு வளையம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக கென்ய விண்வெளி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ’ராக்கெட்டின் நிலைகளை இணைக்க பிரிப்பு வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், பொதுவாக மீள் நுழைவின்போது எரிந்து அழிவது அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றும் விளக்கியுள்ளது.

இதை, தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாக ஒப்புக்கொண்டாலும், சர்வதேச விண்வெளி சட்டத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணை மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பல ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதலுடன், விண்வெளியில் குப்பைகளின் அளவு அதிகரித்து வருவது குறித்த புதிய கவலைகளை இந்தச் சம்பவம் தூண்டியுள்ளது. எனினும், விண்வெளி குப்பைகள் பூமியில் விழுவது இது முதல் முறை அல்ல.

முன்னதாக, எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூலின் ஒரு பகுதி இதே பாணியில் பூமியில் விழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய நாட்டின் செம்மறி பண்ணையில் அது விழுந்தது. தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபுளோரிடாவில் உள்ள ஒரு வீட்டிலும் உலோகத் துண்டுகள் விழுந்தன. இந்த வழக்கை நாசா எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.