மியான்மர் நிலநடுக்கம் முகநூல்
உலகம்

2000 ஐ தாண்டிய உயிரிழப்பு.. மீண்டும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்! உதவி கரம் நீட்டிய இந்தியா!

வானளாவிய கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளை விட வேகமாக சரியும் கோர காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்கள் சரியும் அதிர்ச்சியில் மக்களிடும் ஓலம், கதிகலங்க வைக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்றைய தினம் ( 28.3.2025) பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் சாய்ந்து ஆடுவதும், அதன் பகுதிகள் உதிர்வதும் காண்போதை பதைபதைக்க வைத்துள்ளது. மேலும், வானளாவிய கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளை விட வேகமாக சரியும் கோர காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்கள் சரியும் அதிர்ச்சியில் மக்களிடும் ஓலம், கதிகலங்க வைக்கிறது.

இதனைத்தொடர்ந்து, தாய்லாந்தின் வடக்கே உள்ள சியாங் ராய் நகரிலும், வடக்கு நகரமான சியாங் மாய் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. இந்தநிலையில், மீண்டும், நேற்றைய தினம் 4.7 என்ற ரிக்டர் அளவில் மியான்மரிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும், தாய்லாந்திலும் மதியம் 2.50 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது. படுகாயம் அடைந்த மூவாயிரத்து 408 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலும் உணரப்பட்ட நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு நேரிட்டது. ஆப்கனிஸ்தானில் 4 ரிக்டர் அளவுக்கு மேலாக இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. காபூல் அருகே 280 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் நேரிட்டன.

உதவிக்கரம் நீட்டிய நாடுகள்!

இந்தியாவில் இருந்து மியான்மருக்கு இதுவரை நிவாரண பொருட்களுடன் கூடிய 5 விமானங்கள் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. யங்கூன், நபியிடா நகரங்களுக்கு நிவாரண பொருட்கள், மருத்துவக்குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மியான்மரின் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த கடினமான தருணத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் கூறியுள்ளார். மியான்மருக்கு உதவுவதற்காக இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, மியான்மர் ராணுவத்திற்கு நிதி உதவி, ஆயுத உதவி அளிக்கக்கூடிய சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. மருத்துவ உதவிகள், நிவாரணப்பொருட்களுடன் மீட்புக்குழுவினரையும் இந்நாடுகள் விமானம் மூலம் அனுப்பியிருக்கின்றன. மலேசியாவில் இருந்து மீட்புக்குழுவினருடன் நிவாரணப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

உள்நாட்டுப்போரால் ஏற்கனவே சிதைந்திருக்கும் மியான்மரை மேலும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது இந்த பூகம்பம். இதனால், மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது.