ராமநாதன் அர்ச்சுனா Pt web
உலகம்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரம்.. இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா கைது.!

நிலத் தகராறு ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Premkumar S

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா, யாழ்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிலம் தனது என உரிமை கொண்டாடி வருகிறார். அதேசமயம், மற்றொரு தரப்பும் அந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இது தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில் தான், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25) எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா பிரச்சனையில் உள்ள அந்த இடத்திற்கு சென்று, நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, நிலத்திற்கு உரிமை கோரும் மற்றொரு தரப்பினர் அங்கு வந்து எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய பாதுகாப்புக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து வாக்குவாதத்தில் மிரட்டினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பாதுகாப்புக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியை பொதுமக்களை அச்சுறுத்துவதற்கு எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா பயன்படுத்தியிருக்கிறார் எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்ததுடன் அவரின் கை துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தசூழலில் தான், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இளவாலை காவல்துறையினர் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். தொடர்ந்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நபராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.