modi x page
உலகம்

”ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படாது; ஆனால்..” - பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

ஏஐ தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவல்லது என்றும் அதை உலகெங்கும் எடுத்துச்செல்லவேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்

Prakash J

ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் உலகின் நன்மைக்காகப் பயன்படுத்து குறித்து விவாதிப்பதற்கான சர்வதேச உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இன்று (பிப்.11) தொடங்கியது. இம்மாநாட்டின் இணை தலைமையாக இந்தியா உள்ள நிலையில் பிரதமர் மோடி, இதில் கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் ஜாங் குவோகிங் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளர். சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்களும் இக்கூட்டத்தில் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க உள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டில் இணைத் தலைவர் என்ற முறையில் பேசிய பிரதமர் மோடி, ”AI ஏற்கெனவே நமது வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனிதநேயத்திற்கான ‘கோட்’-ஐ AI எழுதி வருகிறது. ஆனால், அது வரலாற்றில் மற்ற தொழில்நுட்ப மைல்கற்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. AI முன்னோடியில்லாத அளவில் வளர்ந்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படாது என்றும் வேலையின் தன்மைதான் மாறும். புதிய ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஏஐ எதிர்காலம் நன்மை அளிப்பதாகவும், அனைவருக்கமானதாகவும் அமைய, இந்தியா தனது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளது.

நாம் மனிதர்களின் பாதையை பாதுகாக்கப்போகும் ஏஐ காலத்தின் தொடக்கத்தில் உள்ளோம். இந்தியா 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் பொது கட்டமைப்பை வெற்றிகரமாக, மிகவும் குறைந்த விலையில் ஏற்படுத்தியுள்ளது. அது திறந்து மற்றும் அணுகக்கூடிய வகையிலான வலைப்பின்னலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருளாதாரத்தை நவீனப்படுத்தவும், நிர்வாகத்தை சீர்ப்படுத்தவும், மக்களின் வாழ்வை மாற்றவும் தேவையான விதிமுறைகளும், செயல்முறைகளும் உள்ளன” என்றார்.

முன்னதாக, மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரான்ஸ் அதிபர், தங்களுடன் இந்தியா இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டார். ஏஐ துறையில் சீனாவும் அமெரிக்காவும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் வகையில் இம்மாநாடு பார்க்கப்படுகிறது.