உலகம்

திடீரென ஒத்திவைக்கப்பட்ட உலக அழகி இறுதிப் போட்டி

Veeramani

இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட பல போட்டியாளர்களுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உலக அழகி - 2021 இறுதிப் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வியாழக்கிழமையன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இறுதிப் போட்டி நடைபெறவிருந்த போர்ட்டோ ரிக்கோவில் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இறுதிப் போட்டி மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள், போர்ட்டோ ரிக்கோ கொலிசியம் ஜோஸ் மிகுவல் அக்ரெலோட்டில் திட்டமிடப்படும் என்று உலக அழகிப்போட்டி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இறுதிப்போட்டியை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்துள்ள உலக அழகிப் போட்டி அமைப்பு, "போட்டியாளர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் வைத்து, மிஸ் வேர்ல்ட் அமைப்பு மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளது. இன்று காலை கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட பின்னர், சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டதுஎன்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போட்டியாளர்கள் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே, தங்களின் நாடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று உலக அழகிப்போட்டி அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.