தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72ஆவது மிஸ் வேர்ல்ட் உலக அழகி போட்டி, கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கியது. 1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டி நடத்தப்பட்டது.
இதில், 108 நாடுகளில் இருந்து பங்கேற்றனர். அமெரிக்காஸ் கரீபியன், ஆப்ரிக்கா, ஐரோப்பியா, ஆசியா-ஓசினியா என்று ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இதன் இறுதி சுற்று நேற்றைய தினம், (31.5.2025) நடைப்பெற்றது.
தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸெட் டெரிஜி, போலந்தைச் சேர்ந்த மஜா லாஜா, மார்டினிகைச் சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம் என இந்த நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா 2025 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்றார். தொடர்ந்து, எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
தனித்திறமை, நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு, அதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்தான் , இதன் இறுதிச்சுற்றில், 23 வயதே ஆன ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ட் பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா, மகுடத்தை சூட்டினார். ஓபலுக்கு 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இவரை குறித்து மிஸ் வேர்ல்ட் இணையதளம், தெரிவிக்கையில், சர்வதேச விவகாரங்கள் தொடர்ந்து படித்து வரும் ஓபல் சுசாதா செளசி ஒரு நாள் தூதுவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டம் பற்றி பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், இவர் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்றும், ஓபல் அவருடைய வீட்டில் 16 பூனைகள் மற்றும் 5 நாய்களை வளர்த்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, இந்தியா சார்பில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினி குப்தா, முதல் 20 இடங்களில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இறுதிச்சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.