ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் எக்ஸ் தளம்
உலகம்

ஈரானுக்கு ’ஸ்கெட்ச்’ போட்ட UAE.. போரில் US-உடன் கைகோர்ப்பு.. வரலாற்றை மாற்ற முடிவு!

ரஷ்யாவிடமிருந்து கிடைத்த தகவல்களின் ஆதரவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒரு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் தமக்கும் கிடைத்திருப்பதாக ஈரானும் நம்புகிறது.

Prakash J

உலகெங்கும் நிலவும் எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய ஈரான் முடக்கியிருக்கும் ஹார்முஸ் நீரிணையில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகமும் சேரும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.

மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் போரில், 11க்கும் மேற்பட்ட நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால், இஸ்ரேலைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தைவிடக் வேறு எந்த நாடுகளும் கடுமையான பாதிக்கப்பைச் சந்திக்கவில்லை. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் 65% ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கியே குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது, ஈரான் 2,200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியுள்ளது. ஈரானின் தொடர் தாக்குதலால், அங்கு அமெரிக்கத் தளங்கள் மட்டுமின்றி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொருளாதார மையங்கள், எண்ணெய்க் கிடங்குகள் என அனைத்துக்கும் குறிவைக்கப்பட்டன.

ஈரான்

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 95%-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இடைமறித்துள்ளன. ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது குறிவைக்கப்படுவதற்குக் காரணம், அந்நாட்டில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளம்தான். அந்த தளம், முக்கிய அமெரிக்க ராணுவ வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவை நேரடியாகத் தாக்க முடியாத நிலையில், அமெரிக்க நலன்களைச் சார்ந்திருக்கும் நாடுகளையே ஈரான் குறிவைக்கிறது. அந்த வகையிலேயே ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு இலக்காகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், ஓர் அமெரிக்கத் தளத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அது அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்புப் பங்காளியாகவும் விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூட்டுப் பயிற்சிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை தொடர்பாக கடந்த 2024ஆம் ஆண்டே ஒப்பந்தமானது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதன்மூலம், அமெரிக்காவின் பிராந்திய நட்பு நாடுகளுக்கான செலவுகளை அதிகரிக்கக் கூடும். தவிர, தம் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதரவும் சிதையக்கூடும் என ஈரான் நம்புகிறது. இதையடுத்தே ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் தொடர்ந்து குறிவைக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம்

இதைவிட இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. அமீரகம், தன்னை மேற்கத்திய நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அமீரகம் நிதி, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் ஓர் உலகளாவிய மையமாகத் திகழ்கிறது. இவையனைத்தின் வளர்ச்சிக்கும் அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இதை ஈரான் நீண்டகாலமாகவே எதிர்த்துவருகிறது. இதனாலேயே அமீரகத்தைத் தொடர்ந்து ஈரான் பழிவாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவுகள் வரலாற்று ரீதியாகவே சிக்கலைச் சந்தித்து வருகின்றன.

அதற்குக் காரணம், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த அபு மூசா மற்றும் துன்ப் தீவுகள்தான். இந்த தீவுகள் ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்பு, 1971-இல் ஈரானால் ஆக்கிரமிக்கப்பட்டன. அத்தீவுகள் இன்றும் ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது, இருநாட்டு உறவில் நீண்டகால பிரச்னையாக இருந்துவருகிறது. தற்போது, ​​ஐக்கிய அரபு அமீரகம் இந்த மோதலைப் பயன்படுத்தி தீவுகளை ஆக்கிரமித்துவிடுமோ என்று ஈரான் எச்சரிக்கையாக உள்ளது. இன்னொரு புறம், 2020ஆம் ஆண்டின் ஆபிரகாம் உடன்படிக்கைகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியாகத் திகழ்கிறது. இந்த நிலையில்தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுமை தற்போது குறைந்து வருவதாகவும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தானும் இணையக்கூடும் என அது சுட்டிக்காட்டியுள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு, ஈரான்

உலகெங்கும் நிலவும் எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய ஈரான் முடக்கியிருக்கும் ஹார்முஸ் நீரிணையில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகமும் சேரும் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. சமீப நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் முழக்கங்கள் ஈரானுக்கு எதிராக வலுத்து வருகின்றன. மேலும், ஈரானின் ரகசியத்தை ஐக்கிய அரபு அமீரகம் தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், ரஷ்யாவிடமிருந்து கிடைத்த தகவல்களின் ஆதரவுடன், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒரு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற உளவுத் தகவல் தமக்கும் கிடைத்திருப்பதாக ஈரானும் நம்புகிறது. இதனால், எதிர்காலத்தில் போர் எத்தகைய சூழலை உருவாக்கும் என வல்லுநர்கள் அச்சப்படுகின்றனர்.