செய்தியாளர் - கார்த்திகேயன்
அமெரிக்க நடிகையும், பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் மனைவியுமான மேகன் மார்கலின் தந்தை தாமஸ் மார்க்கல், மிக மோசமான வழக்கு ஒன்றில் கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் தாமஸ் மார்க்கல், சில வருடங்களுக்கு முன்பு வசித்து வந்தார். அவர் தங்கியிருந்த வீட்டில் அவரது உடமைகளை, மகன் தாமஸ் மார்க்கல் ஜூனியர் சந்தேகத்தின் பேரில், கடந்த அக்டோபர் மாதம் சோதனை செய்துள்ளார். அப்போது, சில மோசமான படங்களை கண்டுபிடித்ததாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவின் FBI அமைப்பு விசாரணையை தொடங்கியது.
இதையடுத்து, பிலிப்பைன்ஸில் தாமஸ் முன்பு வசித்த இடம் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் FBI அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஸ்லைடுகள், புகைப்பட பிலிம் நெகட்டிவ்கள், புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 78 பொருட்களைக் கைப்பற்றினர்.
அவற்றில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதைச் சித்தரிக்கும் சட்டவிரோதப் படங்கள் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 6-ஆம் தேதி 82 வயதான தாமஸ் மார்க்கல் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நவம்பர் 24-ஆம் தேதி மற்றொரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தின் கிராண்ட் ஜூரி, தாமஸ் மார்க்கல் மீது இரண்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மேகன் மார்க்கலுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.