\
Eisenkot Clinches 1st Coalition Partner In Race To Become Israel's PM
eisenkotReuters

நெருங்கி வரும் பிரதமர் பதவி.. ஐசன்கோட்-க்கு முதல் வெற்றி.. கதிகலங்கிய பெஞ்சமின் நெதன்யாகு!

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் ஐசன்கோட்.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டின் 120 உறுப்பினர்களுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி, ஐசன்கோட்டின் யாஷர் கட்சி தலைமையிலான கூட்டணி, அரபு கட்சிகள் தலைமையிலான கூட்டணி என்று மும்முனை போட்டி நடைபெற்றது. இதில், நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களையும், அரபுக் கட்சிகள் கூட்டணி 19 இடங்களையும் கைப்பற்றின. எந்தகட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்கள் பெற முடியாததால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்கிடையே, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஐசன்கோட்டிடம் ஒப்படைத்திருந்தார்.

eisenkot
eisenkotReuters

டிசம்பர் 6ஆம் தேதி வரை, அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை இடைக்காலப் பிரதமராக நெதன்யாகுவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஐசன்கோட்டால் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், நெதன்யாகுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். யாராலும் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறும். இப்படியான சூழ்நிலையில், இஸ்ரேலின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கும் முயற்சியில், முன்னாள் ராணுவத் தளபதி ஐசன்கோட்டுக்கு முதல் கூட்டணிக் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.

அதாவது, புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், ஐசன்கோட்டின் யாஷர் கட்சியும், எதிர்கட்சியான இஸ்ரேல் அவர் ஹோம் (Israel Our Home) கட்சியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐசன்கோட்டும், இஸ்ரேல் அவர் ஹோம் கட்சியின் தலைவர் அவிக்டோர் லீபர்மேனும் சந்தித்து பேசிய பிறகு, இந்த கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு உருவாகியுள்ள முதல் கூட்டணி இதுவாகும். அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் அமைப்பதற்கும், நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கும் லீபர்மேன் முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அவரே ஐசன்கோட்டுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசன்கோட்டுக்கு முதல் கூட்டணிக் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதால், நெதன்யாகுவின் ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசாங்கம் அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், 61 இடங்கள் என்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு இன்னும் அரசியல் பேச்சுவார்த்தைகள் அவசியமாக உள்ளன.

Eisenkot Clinches 1st Coalition Partner In Race To Become Israel's PM
தண்ணீரை உறிஞ்சுகிறதா AI ? உண்மையைப் போட்டுடைத்த புதிய ஆய்வு!