அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அங்கு இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், இந்துப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, நிர்வாணக் கோலத்தில் சித்திரவதை செய்யப்படும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
மத்திய வங்கதேசத்தின் குமிலா மாவட்டத்தில் கடந்த வாரம் இந்துப் பெண் ஒருவர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், அந்தப் பெண் நிர்வாணக் கோலத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, 36 வயதான உள்ளூர் அரசியல்வாதியான ஃபாஸோர் அலி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவத்தின்போது ஃபாஸோர் அலியைப் பிடித்து உதைத்த அக்கம்பக்கத்தினர், அவரை போலீஸில் ஒப்படைக்காமல் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு, அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அதன்பின்னரே, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தற்போது அவர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் வைரலான அந்தப் பெண்ணின் தாக்குதலின் வீடியோவை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதிசெய்து அவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கேட்டுக் கொண்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் அகமது வாஸீத், ”கடந்த 11 மாதங்களில் கும்பல் தாக்குதல்கள், பயங்கரவாதம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்ததற்கு யூனுஸ் நிர்வாகமே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.