Mark Zuckerberg Warns US Reuters
உலகம்

அமெரிக்காவை சீனா வீழ்த்திவிடும்.. கணித்த மார்க் ஜுக்கர்பெர்க்.. அவர் விடுத்த எச்சரிக்கை என்ன?

செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவின் வளர்ச்சி குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Praveen Joshva L

கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த துறையில் OpenAI நிறுவனத்தின் ChatGpt, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, எலான் மஸ்க்கின் Grok ஆகிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், டீப்சீக் (DeepSeek), தோபாவ் (Doubao), கிமி (Kimi Chat) போன்ற சீனாவின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மில்லியன் டாலர் பொருள்செலவில் இந்த மென்பொருள்களை உருவாக்கி வரும் நிலையில், அதைவிடக் குறைந்த செலவில் சீனா செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை உருவாக்கி வருகிறது.

தற்போதுவரை இந்தச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவே முன்னணியில் உள்ளது என்றாலும், சமீப காலமாக இந்த துறையில் சீனா ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, AI மையங்களை இயக்குவதற்குத் தேவையான மின்சார உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களை (Data Centres) கட்டமைப்பதில் சீனா அமெரிக்காவைவிட முன்னிலையில் உள்ளது.

இதனைக் குறிப்பிட்டு மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்காவை சீனா வீழ்த்திவிடும் என்று கூறியுள்ளார்.

Mark Zuckerberg

இதுகுறித்து பேசியுள்ள அவர், செயற்கை நுண்ணறிவுத் துறையில் எந்த நாடு முன்னிலை பெறுகிறதோ, அந்த நாடே எதிர்கால உலக புவிசார் அரசியலின் அதிகார மையத்தைக் கையகப்படுத்தும் என்றும், அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் இந்த துறையில் அமெரிக்காவை சீனா வீழ்த்திவிடும் என்றும் கூறியுள்ளார். மேலும், AI தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா சீனாவைவிடப் பின்தங்கினால், அது அமெரிக்காவிற்குப் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அமெரிக்க அரசு கொண்டுவரும் கடினமான கட்டுப்பாடுகள் அல்லது சட்டத்திட்டங்கள் அமெரிக்க AI மாடல்களின் வெளியீட்டை ஒரு மாதம் தாமதப்படுத்தினால்கூட, அது சீனாவிற்குப் பெரிய நன்மையாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.