'அருணாச்சலப் பிரதேசம் எங்கள் பகுதி'.. கொந்தளித்த சீன அரசு.. இந்தியா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?
இந்தியாவின் ஓர் அங்கமாக உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா நீண்ட ஆண்டுகளாக பிரச்னை செய்துவருகிறது. ஆனால், சீனாவின் இந்தக் கூற்றுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
எனினும் அதைப் பற்றி கண்டுகொள்ளாத சீனா அருணாச்சல பிரதேசதத்தின் பகுதிகளுக்கு சீன மொழியில் பெயர் வைப்பது, எல்லையில் ராணுவ கட்டுமானங்களை மேற்கொள்வது என தொடர்ந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இதன் உச்சமாக கடந்த டிசம்பர் 2022-இல் அருணாச்சல பிரதேச பகுதியில் எல்லைக் கோட்டை மீற முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல கடந்த 2023-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 27 இடங்கள் மற்றும் நிலப்பகுதிகளை சீன மொழியில் சீன அரசு அடையாளப்படுத்தியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தச் சூழலில் சமீபத்தில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் 27 இடங்களுக்கு அவற்றின் நிலையான இந்திய பெயர்களுடன் இந்திய அரசு அடையாளப்படுத்தி சீனாவுக்கு பதிலடி கொடுத்தது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுவானிடம் (Guo Jiakun) கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், சீனாவால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பெயர்களுக்குப் பதிலாக இந்தியா புதிய பெயரை வைத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது என்று விமர்சித்துள்ளார். மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்குச் சொந்தமானது கிடையாது, அது சீனாவுக்கு சொந்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி என்பதும், அங்கு ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசு இயங்கி வருகிறது என்பதும் இந்தியாவின் தெளிவான நிலைப்பாடாக உள்ளது. இதன் காரணமாக சீனா அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து உரிமை கோரி வந்தாலும், உலகளவில் அது இந்தியாவின் ஒரு பகுதி என்றே ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

