கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியதுடன், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி கடந்த மார்ச் 9ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, நாளை இவர் முறைப்படி பிரதமராகப் பதவியேற்பார் என கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், தற்போதுள்ள அமைச்சர்களையே மார்க் கார்னி தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க், வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகிய முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையே, கனடாவின் பிரதமரான ஐஸ்டின் ட்ரூடோ, முறைப்படி ராஜிநாமா கடிதத்தை அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பை கனடாவின் புதிய பிரதமர் எப்படி கையாளப் போகிறார் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மார்க் கார்னி, தொலைதூர வடமேற்கு பிரதேசங்களில் உள்ள ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்தார். ஹார்வர்டில் கல்வி பயின்றார். அங்கு அவர் ஒரு நட்சத்திர ஐஸ் ஹாக்கி வீரராகவும் விளங்கினார். பின்னர், 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8வது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.