2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடோவுக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1901 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு உலகின் மதிப்பு மிக்க விருதாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கான போரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான், அஜர்பைஜான், ருவாண்டா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளும் அமைதிக்கான நோபல் பரிசு பட்டியலில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்தன. இவையெல்லாம் சேர்ந்து இந்த ஆண்டு வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1967 ஆம் ஆண்டு பிறந்த மரியா வெனிசுலாவில் முக்கியமான எதிர்கட்சித் தலைவராக உள்ளார். தொடர்ந்து, வெனிசுலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகம் மலர வேண்டுமெனவும் அமைதியாக போராடி அதில், வெற்றியும் கண்டுள்ளார். இத்தகைய சூழலில்தான், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த, சில மாதங்களாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், வெனிசுலாவைச் சார்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு கொடுக்கப்பட்டு இருப்பது ட்ரம்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.