லிசிபிரியா கங்குஜம்
லிசிபிரியா கங்குஜம் ட்விட்டர்
உலகம்

'நம் பூமியை காப்பாத்துங்க' மேடையில் திடீரென முழங்கிய மணிப்பூர் சிறுமி..COP28 மாநாட்டில் நடந்ததுஎன்ன?

Prakash J

துபாயில், COP28 எனும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 28வது உச்சி மாநாட்டில், மணிப்பூரைச் சேர்ந்த 12 வயதான லிசிபிரியா கங்குஜம், டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராகக் கலந்துகொண்டார். அந்த மாநாட்டு மேடையில், ’புதைபடிம எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள். நம் பூமியைக் காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்டிருந்த வாசகத்துடன் கூடிய ஒரு பதாகையுடன் அவர் மேடையில் ஏறினார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் பலரும் வரவேற்று கைதட்டினர். ஆனாலும் அவருடைய நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அவர் மாநாட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருந்த காவலர்களாலும் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் தனது சமூக வலைதளத்தில், “இன்று நான் #COP28UAE இன் ஐ.நா உயர்மட்ட முழு அமர்வை சீர்குலைக்கும் எனது எதிர்ப்பின் முழு வீடியோவும் இதோ. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு 30 நிமிடங்களுக்கும் மேலாக என்னைக் காவலில் வைத்தனர். எனது ஒரே குற்றம்- இன்றைய காலநிலை நெருக்கடிக்கு முக்கிய காரணமான புதைபடிவ எரிபொருட்களை வெளியேற்றக் கோருவது. இப்போது அவர்கள் என்னை COP28 இலிருந்து வெளியேற்றினர்.

இதையும் படிக்க: ”எப்படி மீள்வது என தெரியவில்லை” - உலகக்கோப்பை தோல்வி குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்த ரோகித்!

இன்றைய காலநிலை நெருக்கடிக்கு முக்கிய காரணம் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை படிப்படியாக அகற்றுவதற்கு அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்றைய உங்கள் செயல் நாளை எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நாம் ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

எனது வருங்கால சந்ததியினர் மீண்டும் அதே விளைவுகளை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. நமது தலைவர்களின் தோல்விகளுக்காக லட்சக்கணக்கான அப்பாவி குழந்தைகளின் உயிர்களை பலி கொடுப்பதை எந்த விலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் போன்ற மில்லியன் கணக்கான குழந்தைகள் பருவநிலை பேரழிவுகளால் தங்கள் வாழ்க்கையை இழந்து, பெற்றோரை இழந்து, வீடுகளை இழக்கிறார்கள். இது உண்மையான காலநிலை.

பில்லியன் கணக்கான டாலர்களை போர்களில் செலவிடுவதற்குப் பதிலாக, பசியை ஒழிக்கவும், கல்வியை வழங்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் செலவிடுங்கள். இன்றைய காலநிலை நெருக்கடியால் முற்றிலும் விரக்தியடைந்த குழந்தை நான். பாதிக்கப்பட்டவர்களின் முதல் வரிசை நாங்கள். 2500 க்கும் மேற்பட்ட புதைபடிவ எரிபொருள் பரப்புரையாளர்களுடன் COP28 இல் நடக்கும் பேச்சுவார்த்தை செயல்முறையில் படிம எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவதில் உள்ள முக்கிய சிக்கல்கள் பக்கபலமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” எனக் குரல் கொடுத்த அவர், தனது குரலுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் மற்றும் COP28 மாநாட்டுத் தலைவர் சைமன் ஸ்டீலு ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க: மக்களவையில் ஊடுருவிய இருவர்.. மடக்கிப்பிடித்த எம்.பி.க்கள்... பரபரப்புக்கு மத்தியில் நடந்தது என்ன?

மேலும் அவர், ”புதைபடிம எரிவாயுக்களை எதிர்த்து நான் போராடுகிறேன். எனது அங்கீகாரத்தை எப்படி ரத்து செய்ய முடியும்? நீங்கள் உண்மையிலேயே புதைபடிம எரிவாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இருந்தால் என் மீதான தடைய நீக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். ’தன் மீதான நடவடிக்கை குழந்தைகள் உரிமை மீறலாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீதான தடை அரை மணி நேரத்தில் நீக்கப்பட்டது.

யார் இந்த லிசிபிரியா கங்குஜம்?

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த இவர், தன்னுடைய 6வது வயது முதல், சுற்றுச்சூழல் ஆர்வலராகச் செயல்பட்டு வருகிறார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் என அவர் நம்புகிறார். உலக அளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான இவர், ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2019 (COP25)இல் உலகத் தலைவர்கள் முன்பு உரையாற்றி கவனம் ஈர்த்தார். அப்போது, ‘உலகத் தலைவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்ற உடனடி காலநிலை நடவடிக்கைகளை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கும் ஓர் இளம்தலைவராக வலம் வரும் அவர், உலகில் காலநிலை மாற்றத்திற்கான முன்னணி குரல் கொடுப்பதில் ஒருவராகவும் திகழ்கிறார். இந்தியாவின் அதிக மாசு அளவைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றவும், பள்ளிகளில் காலநிலை மாற்ற எழுத்தறிவை கட்டாயமாக்கவும் லிசிப்ரியா நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் காலநிலை நடவடிக்கைக்காக பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஷூவில் இடம்பெற்ற வாசகம்.. ஐசிசி எதிர்ப்புக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்!