மக்களவையில் ஊடுருவிய இருவர்.. மடக்கிப்பிடித்த எம்.பி.க்கள்... பரபரப்புக்கு மத்தியில் நடந்தது என்ன?

மக்களவையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை இருவர் கொண்டுவந்ததால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை
மக்களவைபுதிய தலைமுறை

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (டிச.13) பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் மக்களவையில் நுழைய முயற்சித்தனர். அவர்கள் சபாநாயகரை நோக்கி செல்ல முயற்சித்தனர். மக்களவையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை இருவர் கொண்டுவந்ததால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே இருவர் கைது

மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்த நிலையில் நீலம், அன்மோல்ஷிண்டே என்ற இரண்டு பெண்கள் டெல்லி காவல்துறையினரால் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

அவர்கள் வைத்திருந்தது ‘கலர் பாம்’ என அழைக்கப்படும் கேனில், அடைக்கப்பட்டு நிறத்தை உமிழும் வகையில் உருவாக்கப்படும் பொருள் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

மக்களவை
மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ்

நாடாளுமன்ற வளாக சாலைகள் மூடல்

நாடாளுமன்ற வளாகத்துக்குச் செல்லும் சாலைகள் அனைத்தையும் போலீசார் மூடி சோதனை நடத்துகின்றனர். நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்களும் நாடாளுமன்றத்திற்குள்ளேயும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அவையில் இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ராய்ப்பூர் சென்றடைந்தார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பெரிய அளவில் சர்ச்சையாகியுள்ள நிலையில், சம்பவத்தின்போது பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுச் சீட்டை கொடுத்தது யார்?

உள்ளே சென்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தியே சென்றிருக்க வேண்டும் என்பதால், அந்த நுழைவுச் சீட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவுடைய நுழைவு ரசீதைதான் மக்களவைக்குள் புகுந்த இருவர் பயன்படுத்தியதாக முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினர் தானிஷ் அலி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மக்களவைக்குள் நடந்த விதிமுறை மீறலுக்கு முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அத்துமீறி நுழைந்தவர்களை மடக்கிப் பிடித்தவர்கள் யார்?

மக்களவைக்குள் இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருஜீத் சிங், சிவசேனா கட்சியைச் சேர்ந்த தெற்கு மும்பை நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக்கா கட்சியின் ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான அனுமன் பெனிவால் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான், மக்களவைக்குள் நுழைந்து மர்ம பொருளை பயன்படுத்திய அந்த இரண்டு பேரையும், துணிச்சலுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். அதற்குப் பிறகுதான் அவை பாதுகாவலர்கள் வந்து பிடித்துள்ளனர்.

இதுபற்றி அங்கு இருந்தவர்கள் சொல்வதென்ன?

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் தலைவர்

”இரண்டு இளைஞர்கள் கேலரியில் இருந்து குதித்தனர். அவர்களால் ஏதோ வாயு வெளியேறியது. உடனே எம்.பிக்களால் அவர்கள் பிடிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்களால் வெளியே கொண்டுவரப்பட்டனர். அவை, மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும். இன்று 2001இல் நாடாளுமன்ற தாக்குதல் உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது”

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

வேணுகோபால், காங்கிரஸ் பொதுச்செயலாளர்

“பாதுகாப்பு குறைபாடுகளை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கட்டடங்களில் ஒன்றான நாடாளுமன்றத்திலேயே இன்றைய தினம் இச்சம்பவம் நடந்துள்ளது.

வேணுகோபால்
வேணுகோபால்

இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இன்றைய தாக்குதலில் யாருக்கும் பெரிய காயமோ, சேதமோ ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது”.

அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர்

”2001 தாக்குதலின் நினைவு நாளான இன்று, அதே நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறல் நமது ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயக கோயிலின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள், அவர்களின் நோக்கங்கள் என்னென்ன என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும். நடவடிக்கை மிகவும் விரைவாகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும்”.

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்

”இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு, எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்

இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com