ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலைக்கு, பாகிஸ்தானை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசாங்கத்திடமிருந்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஆதரிக்கும் என எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், இந்திய ராணுவமும் உஷார் நிலையில் உள்ளது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சில இந்தியர்களின் வீடியோக்கள் பாகிஸ்தானில் வைரலாகி வருகின்றன. போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோருக்குப் பிறகு, இப்போது லக்னோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் மாத்ரி ககோட்டியின் காணொளியும் பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மோடி அரசாங்கத்தை அவர் கடுமையாக சாடியிருப்பதே, பாகிஸ்தானில் அந்த வீடியோ வைரலாவதற்குக் காரணமாக உள்ளது.
அந்த வீடியோவில், ”ஒருவரின் மதத்தைக் கேட்டவுடன் துப்பாக்கிச் சூடு நடத்துவது பயங்கரவாதம். மதத்தைக் கேட்டவுடன் கும்பல் கும்பலாகக் கொலை செய்வது, வேலையை விட்டு நீக்குவது, வீடு கொடுக்க மறுப்பது, வீட்டின் முன்பு புல்டோசர் கொண்டு வருவது போன்றவையும் பயங்கரவாதம்தான். உண்மையான பயங்கரவாதியை அடையாளம் காணுங்கள். பஹல்காமில் 27 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் உங்களையும் என்னையும்போல தோற்றமளிக்கும் சாதாரண இந்தியர்களும் இருந்தனர். 27 பேர் உயிரிழந்தனர், ஊடகங்கள் அவர்களின் இறந்த உடல்களின் TRP-ஐ சேகரிப்பதில் மும்முரமாக இருந்தன. பொறுப்பானவர்களிடம் நியாயமான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்பில் இவ்வளவு பெரிய குறைபாடு நடந்தது, உள்துறை அமைச்சருக்கு அது பற்றித் தெரியாது” என அதில் தெரிவித்துள்ளார். அவருடைய, இந்தப் பதிவு பாகிஸ்தானில் உள்ள பல சமூக ஊடகதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவரது இந்த வீடியோ தொடர்பாக தற்போதுவரை லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
பேராசிரியர் மாத்ரி ககோடி சமூக ஊடகங்களில் டாக்டர் மெதுசா என பிரபலமாக அறியப்படுபவர். அவர் அடிக்கடி அரசாங்த்தை விமர்சிக்கக்கூடியவர். அவர் அசாமில் வசிக்கிறார். அவரது வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது அவர், லக்னோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.