"பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். ”இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் உடந்தையாக உள்ளது” என இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்குப் பாகிஸ்தான், ”இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்” எனத் தெரிவித்திருந்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு அந்த நாடும் விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு எல்லை தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ”பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் மிகவும் நெருக்கமாக உள்ளேன். காஷ்மீருக்காக இரு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சண்டை நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையே 1,500 ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. ஆனால், இந்த பிரச்னையை ஏதேனும் ஒரு வழியில் இரு நாடுகளும் தீர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். இருநாட்டுத் தலைவர்களையும் எனக்குத் தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.