செய்தியாளர் - M. மீரா
இஸ்ரேலில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முக்கியமான அரசியல் சவாலாக மாறியுள்ளது. 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் என்பதால், பாதுகாப்பு, ஈரான், காஸா போர் உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய மையமாகியுள்ளன.
நெதன்யாகு தேர்தலுக்கு முன்பாக ஈரானுடன் மீண்டும் ராணுவ மோதலைத் தூண்டக்கூடும் என்றும், பதவியை இழந்தால் அவருக்கு அரசியல் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் IRGC அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், நெதன்யாகு தேர்தல் காரணமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை இது ஈரானிய ராணுவ அதிகாரியின் குற்றச்சாட்டு மட்டுமே என்றும் தகவல்கள் கூறுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் விமானப்படைத் தளத்தில் பேசிய நெதன்யாகு, தேர்தலுக்கு முன்பாக எதிரிகள் இஸ்ரேலைத் தாக்க முயற்சிக்கலாம் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் எதிரிகளை எங்கு இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டு, அவற்றை முக்கிய சாதனைகள் என விவரித்தார்.
காசாவில் கடந்த சில வாரங்களில் 100-க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டதாகவும் நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், லெபனானிலும் இஸ்ரேல் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை முன்னிறுத்துவது, தேர்தல் பிரசாரத்தில் நெதன்யாகுவின் வழக்கமான அணுகுமுறையாக இருப்பதாக Reuters குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு முக்கிய அரசியல் சவால், அவருக்கு எதிராக ஒன்றிணைந்த 5 எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதாகும்.
யாயிர் லாபிட், காடி ஐசன்கோட், நஃப்தலி பென்னட், அவிக்டோர் லீபர்மேன் மற்றும் யாயிர் கோலன் ஆகிய ஐந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களது உடனடி நோக்கம் நெதன்யாகு தலைமையிலான அரசை மாற்றுவதற்கான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதாகும்.
இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset-ல் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தது 61 இடங்கள் தேவை. தற்போதைய அரசியல் சூழலில் நெதன்யாகு அணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இந்த எண்ணிக்கையை பெறுவது என்பது சவாலாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
இதற்கிடையே ஈரான் விவகாரம் இஸ்ரேலின் தேர்தல் அரசியலிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக தன்னை வலிமையான தலைவராக முன்னிறுத்தி வருகிறார் நெதன்யாகு. ஈரான், ஹமாஸ், ஹெஸ்பொல்லா உள்ளிட்ட அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தனது அனுபவத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள், 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்பும் அதன் பின்னரும் ஏற்பட்ட பாதுகாப்புத் தோல்விகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.
மேலும் இஸ்ரேலின் தேர்தல் செயல்முறையில் தலையிட ஈரான் முயற்சிக்கலாம் என்ற எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள், சமூக வலைதளங்கள், போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் இஸ்ரேலியர்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை. அதனால், ஈரான் தேர்தலை மாற்றுமா? என்பது தற்போது ஒரு சாத்தியக்கூறாகவே பார்க்கப்படுகிறது.