\
US troops to exit Iraq after 20 years Iran proxies celebrate
US troops leaving Iraq Reuters

முடிவுக்கு வந்த அமெரிக்காவின் 20 ஆண்டுகால ஆட்டம்.. வெற்றியில் திளைக்கும் ஈரான்?

20 ஆண்டுகள் நீடித்த அமெரிக்க ராணுவ இருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

ஈராக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அமெரிக்க ராணுவ இருப்பு தற்போது முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஈராக்கில் உள்ள கடைசி அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்தும் படைகள் வெளியேற உள்ளதாக Reuters தெரிவித்துள்ளது. 2003-ல் தொடங்கிய அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் முக்கிய அத்தியாயம் இதன்மூலம் முடிவுக்கு வருகிறது.

இந்த வெளியேற்றம் ஈரானுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக் குழுக்களுக்கும் ஒரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் உருவாகக்கூடிய பாதுகாப்பு இடைவெளியை ஈரான் ஆதரவு குழுக்களும், Islamic State எனப்படும் ISIS அமைப்பும் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற கவலையும் ஈராக் பாதுகாப்பு வட்டாரங்களில் எழுந்துள்ளது.

2003-இல் அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக் மீது படையெடுத்து, அப்போதைய அதிபர் சதாம் உசேனின் ஆட்சியை கவிழ்த்தன. அதன்பின்னர் பல ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தங்கி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

2011-இல் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறின. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் ISIS அமைப்பின் எழுச்சி காரணமாக மீண்டும் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

2014 முதல் 2017 வரை ISIS-க்கு எதிரான போரில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி, உளவுத்தகவல், விமானத் தாக்குதல் மற்றும் தளவாட ஆதரவை வழங்கியது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான இந்த ராணுவ நடவடிக்கைகளில் சுமார் 4,500 அமெரிக்கர்கள் உயிரிழந்ததாக Reuters தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் ஈரானின் செல்வாக்கு ஈராக்கில் அதிகரிக்கக்கூடும் என்று சில ஈராக் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவ இருப்பு ஓர் எதிர்ச்சக்தியாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தடுப்பு தற்போது குறையக்கூடும்.

ஈராக் பாதுகாப்பு ஆய்வாளர் ஜாசிம் அல்-பஹத்லி, அமெரிக்க தலைமையிலான கூட்டணி வெளியேறுவது ஈரானுக்கு சாதகமாக இருக்கலாம் என்று Reuters-க்கு தெரிவித்துள்ளார். அவரது பார்வையில், ஈரான் ஆதரவு குழுக்கள் இந்த வெளியேற்றத்தை தங்களது வெற்றியாக சித்தரிப்பதுடன், பாதுகாப்பு மற்றும் அரசியல் முடிவெடுப்புகளில் தங்களது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்யக்கூடும்.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு ISIS மீண்டும் வலுப்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஈராக் தற்போது ஒரு சிக்கலான நிலையில் உள்ளது. ஒருபுறம் அமெரிக்காவுடன் அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள்; மறுபுறம் ஈரானுடன் நெருக்கமான உறவுகள்.

Qasem Soleimani
Qasem Soleimanireuters

2020-இல் ஈராக்கின் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே பல முறை மோதல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவின் கடைசிப் படைகளும் வெளியேறுவது ஈராக்கின் பாதுகாப்பு சமன்பாட்டில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறது.

ஈரானின் செல்வாக்கு அதிகரிக்குமா? ஈராக் பாதுகாப்புப் படைகள் இந்த வெற்றிடத்தை நிரப்புமா அல்லது ISIS போன்ற அமைப்புகள் மீண்டும் வாய்ப்பைப் பயன்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com