king oyo nyimba  ai / reuters
உலகம்

3 வயதிலேயே அரியணை ஏறிய சிறுவன்.. Guinness சாதனை படைத்த அதிசய அரசர்! 34 வயதில் அதிர்ச்சி மரணம்!

3 வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது அரசராக சாதனை படைத்த உகாண்டாவின் மன்னர் கிங் ஓயோ, தனது 34-வது வயதில் உயிரிழந்த சம்பவம் உகாண்டா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

உகாண்டாவின் டோரோ பாரம்பரிய அரசின் இளவரசரான ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி நான்காம், 3 வயதிலேயே தந்தை மரணத்துக்குப் பிறகு அரியணை ஏறி, உலகின் மிக இளம் மன்னராக Guinness சாதனை படைத்தார். சிறுவயதில் குடும்பம், அதிகாரிகள் ஆட்சியை நடத்த, பின்னர் கலாச்சாரம், பாரம்பரியம், சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், 34 வயதில் திடீரென மரணம் அடைந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3 வயது… பால் மணம் மாறாத மழலைப் பருவம். சரியாகப் பேசக்கூடத் தொடங்கியிருக்காத அந்த வயதில், உகாண்டாவைச் சேர்ந்த ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி நான்காம் என்ற இளவரசர் அரியணை ஏறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். 1992ஆம் ஆண்டு பிறந்த கிங் ஓயோ, 1995 ஆம் ஆண்டு தனது தந்தை திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரண்டு சகோதரிகளுடன் பிறந்த கிங் ஓயோ, வெறும் 3 வயதில் உகாண்டாவின் டோரோ பாரம்பரிய அரசின் மன்னராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் அரியணை ஏறிய மன்னராக Guinness World Records-ல் இடம்பிடித்தார். சிறுவயதிலேயே அரியணை ஏறியதால், அவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் அரச குடும்பத்தினரும் அதிகாரிகளும் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்தனர். அரச குடும்ப நிகழ்வுகளை அவரது தாயார் குயின் மதர் பெஸ்ட் கெமிகிசா கவனித்து வந்தார்.

king oyo nyimba

பின்னர் வளர்ந்த கிங் ஓயோ, தனது ஆட்சிக் காலத்தில் சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தினார். உகாண்டா ஒரு குடியரசு நாடாக இருப்பதால், கிங் ஓயோவுக்கு நேரடி அரசியல் அதிகாரம் குறைவாக இருந்தாலும், டோரோ அரச குடும்பம் அப்பகுதி மக்களிடையே முக்கியமான கலாச்சார மற்றும் சமூகப் பங்கைக் கொண்டிருந்தது. 3 வயதில் தொடங்கிய அவரது அரச வாழ்க்கை, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் கிங் ஓயோ, ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மிக இளம் வயதிலேயே மன்னராகப் பதவியேற்று உலகத்தின் கவனத்தை ஈர்த்த உகாண்டாவின் மன்னர் கிங் ஓயோ, தனது 34-வது வயதிலேயே உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர