கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸின் பங்கேற்பு, பிரிட்டன் மன்னா் சாா்லஸுடனான சந்திப்பு ஆகியவற்றை ரத்து செய்ய வாடிகன் திட்டமிட்டிருந்தது.
அந்த வகையில், போப் பிரான்சிஸை வாட்டிகனில் சந்திக்க இருந்த மன்னர் மற்றும் ராணியின் அரசுமுறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையும் அறிவித்துள்ளது. அவர்கள் அடுத்த மாதம் ஏப்ரல் 7ஆம் தேதி இத்தாலிக்குச் சென்று, போப்பாண்டவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், மன்னர் மற்றும் ராணி ஆகியோர் போப்பாண்டவரைச் சந்திக்கும் முடிவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ ஆலோசனையின்படி, போப் பிரான்சிஸ் நீண்டகால ஓய்வு தேவைப்படும் நிலையில் உள்ளார். அவர் பூரணமாக குணமடைந்ததன் பின்னர் சந்திப்பு முன்னெடுக்கப்படும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.