போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்.. தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடும் மக்கள்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சிறுநீரகத்தில் சிறிய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் எந்த பெரிய பிரச்னை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, தனது பணிகள் சிலவற்றையும் அவர் மருத்துவமனையில் இருந்தபடி போப் பிரான்சிஸ் செய்யத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், போப் பிரான்சிஸ் பூரண குணமடைய வேண்டி, வாட்டிகன் நகரில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வாட்டிகன் தேவாலயத்தின் முன்பு உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடி, கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் திரண்டு கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஜெபமாலையை ஏந்தியபடி மனமுருகி வேண்டிக்கொண்டு, போப் பிரான்சிஸ் உடல்நலம் சீராக வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பிரார்த்தனையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.