Iran Supreme leader Ayatollah Ali Khamenei  web
உலகம்

ஒரே நாளில் வீழ்ந்த ஈரான் தலைவர்.. ஈரான் பலவீனமானது எப்படி..? இஸ்ரேல் போட்ட Sketch!

போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டிருப்பது இஸ்ரேல் விமானப்படையை எதிர்க்க கூட முடியாத நிலையில் ஈரான் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது..

PT WEB

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக கருதப்பட்ட ஈரானின் தலைவர் கமேனி ஒரே நாள் போரில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாள் போரில் ஈரானின் பலவீனம் அம்பலப்பட்டுள்ளது.

செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும் ஈரானை தாக்கும் என்றே பரவலாக பேசப்பட்டது. அப்படி இந்த போர் ஏற்பட்டால் இரு தரப்புக்கும் அதிக சேதம் ஏற்படும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அமெரிக்க நிலைகள் தகர்க்கப்படும் என்றும் பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளது ஈரானின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் விமானப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியது, இஸ்ரேல் விமானப்படையை எதிர்க்க கூட முடியாத நிலையிலே ஈரான் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Israel strikes Tehran

அதோடு இஸ்ரேல் மீதோ அல்லது அமெரிக்க தளங்கள் மீதோ ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகவும் தற்போதுவரை செய்திகள் வெளியாகவில்லை. ஈரான் இந்த அளவு பலவீனமடைந்ததற்கு இஸ்ரேல் கடந்த ஆண்டு மேற்கொண்ட 12 நாள் போர் நடவடிக்கையே காரணமாக கூறப்படுகிறது.

ஈரான் பலவீனமானது எப்படி..?

ஈரான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராக களமாடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி அந்த அமைப்புகளை பலப்படுத்தி வந்தது. ஈரானுக்கு பல்வேறு சூழல்களில் ஏற்படும் அபாயத்தின்போது இந்த அமைப்புகளே ஈரானின் உதவிக்கு வந்தன.

இத்தகைய நிலையில், ஹமாஸ் அமைப்பின் மீது கடந்த இரண்டு ஆண்டாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நடவடிக்கை அந்த அமைப்பை வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது. அதே போல ஹமாஸ் அமைப்பின் உதவிக்கு வந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தியது.

Hamas group

இந்த தாக்குதல்களில் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் உள்கட்டமைப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஈரானுக்கு ஆதரவான இந்த அமைப்புகள் பலவீனமடைந்த சூழலை பயன்படுத்தி, கடந்த ஆண்டு ஜூன் 13 முதல் ஜூன் 24 வரை ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானின் விமான நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் பெரும் சேதமடைந்தன. மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி மற்றும் பல முக்கிய இராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். அதோடு ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது.

இஸ்ரேல் விமானங்கள் ஈரான் தலைநகர் தெக்ரான் மீது எதிர்ப்பின்றி பறந்த வீடியோ காட்சிகளும் வெளியாகின. அதே போல கடந்த ஆண்டு ஈரான் தொடுத்த பதில் தாக்குதலும் மிக வலுவாகவே இருந்தது. இஸ்ரேலின் அயன் டோமை உடைத்து ஏராளமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கின. எனினும் இஸ்ரேலின் வான்படையை தாண்டி ஈரான் வான்படையால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.

The Israeli Iron Dome missile defence system

இப்படி ஈரானின் பலம் கடந்த ஆண்டு பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், அதனை சீரமைக்கவே பல ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டது. இந்த சூழலில்தான் இந்த ஆண்டு அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே ஈரான் திணறியுள்ளது.

ஈரானில் ஊடுருவிய மொஸாட்..

போரின் முதல் நாளிலேயே இஸ்ரேலிய விமானங்கள் அதிபர் மாளிகையை தரைமட்டமாக்கின. மேலும் ஈரானின் ராணுவத்தில் தீவிரமாக ஊடுருவியுள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் மூலம் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தங்கியிருந்த இடமும் தெரியவந்துள்ளது. இந்த உளவு தகவல் மூலம் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் காரணமாகவே அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்படி இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையே ஈரானின் தலைவர் கமேனி ஒரே நாள் போரில் கொல்லப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளது.