ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) அதிவேக 'எதிஹாத் ரயில்' (Etihad Rail) பயணிகள் சேவை என்பது அந்நாட்டின் தேசிய ரயில்வே திட்டமாகும். நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Abu Dhabi, Dubai, Sharjah, Fujairah உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் அபுதாபி–துபாய் இடையேயான பயணம் சுமார் 50–60 நிமிடங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ரயில், மணிக்கு 200 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிவேக 'எதிஹாத் ரயில்' பயணிகள் சேவை ரயிலை இயக்கவிருக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைக் கேரள இளைஞர் நிஷாத் (Nishad K A) பெற்றுள்ளார். இந்தியாவில் ரயில்வே துறையில் அனுபவம் பெற்ற அவர், பின்னர் UAE-யில் கடுமையான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த சாதனை, சர்வதேச ரயில்வே துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த 29 வயதான நிஷாத், கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அங்கு, உள்ளூர் நிறுவனம் ஒன்றில், காசாளராகத் தனது வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், வாசனைத் திரவியங்களை விற்பது, ஹாட் டாக் சாண்ட்விச்களைத் தயாரிப்பது மற்றும் வீட்டுக்கே உணவு வழங்கும் சேவைகளில் பணியாற்றினார். இதற்கிடையே, அவர் 2017-இல் பாம் ஜுமைரா மோனோ ரெயில் மூலம் ரயில் போக்குவரத்துத் துறையில் நுழைந்தார். துபாய் டிராம் மற்றும் துபாய் மெட்ரோ செயல்பாடுகளில் பணியாற்றியபோது, அவர் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டார். அவரது சிறப்பான செயல்திறன், அவரை முக்கிய பயிற்றுநர் மற்றும் மதிப்பீட்டாளராகப் பதவி உயர்வு பெற வழிவகுத்தது. அதன் பயனாக, 2023-இல் ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாட்டுக் குழுத் தலைவராகச் சேர்ந்த அவர், விரைவிலேயே மூத்த குழுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அவர் ரயில் செயல்பாட்டுக் குழுத் தலைவர், முதன்மைப் பயிற்றுநர் மற்றும் மதிப்பீட்டாளர் எனப் பதவி உயர்வு பெற்ற அவர். தற்போது எதிஹாத் ரயிலில், ரயில் ஓட்டுநர்கள் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
நிஷாத்துக்கு ஹிபா கஃபூர் என்ற மனைவியும், கலீஃபா ஜாயித் என்ற மகனும் உள்ளனர். நிஷாத்தின் சகோதரர் ரின்ஷாத், எதிஹாத் ரயிலின் சரக்கு ரயில்களுக்கான லோகோ பைலட்டாக உள்ளார். முன்னதாக, 2020-ஆம் ஆண்டு நிஷாத், முதன்முதலில் ரயில் கேப்டன் பதவிக்கு விண்ணப்பித்தபோது, அவரது மின்னஞ்சல் முகவரியில் ஏற்பட்ட ஒரு பிழை அவரது முன்னேற்றத்தைத் தடுத்தது. எனினும், 2022ஆம் ஆண்டு அதை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2024-இல், அவர் எதிஹாத் ரயிலின் அதிவேக பயணிகள் ரயில்களின் முதல் இந்திய கேப்டன் என்ற பட்டத்தைப் பெற்றார்.