பால் மெக்கன்சி நெதாங்கே
பால் மெக்கன்சி நெதாங்கே ட்விட்டர்
உலகம்

191 குழந்தைகள் உட்பட 400 பேரைக் கொன்ற கென்ய பாதிரியார்.. மார்ச் 7 நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Prakash J

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ’குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் பாதிரியாராக பால் மெக்கன்சி நெதாங்கே என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் தனது பிரசங்கத்தின் போது, 'உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்து பிரார்த்தனை செய்பவர்கள்தான் இயேசுவை சந்திக்க முடியும்' என போதனை செய்துள்ளார். அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதில், 191 குழந்தைகள் உட்பட 400க்கும் மேற்பட்டோரை கொன்றதாக பகீர் தகவல் வெளியானது.

இதற்கிடையே, ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில் அவர்களில் பலரும் பட்டினி, மூச்சுத்திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரியவந்தது.

அதையடுத்து பால் மெக்கென்சி மற்றும் அவரது சீடர்கள் 30 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சூழலில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, ’கொலை செய்யப்பட்ட 191 குழந்தைகளில் 180 குழந்தைகளின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ’எம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை’ என பால் மெக்கென்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக பால் மெக்கென்சி விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பால் மெக்கன்சியுடன் அவரது சீடர்கள் 30 பேரும் அடுத்த மாதம் (மார்ச்) 7ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றே வழக்கு விசாரணை தொடங்குமென தெரிகிறது. பால் மெக்கென்சி மற்றும் அவரின் சீடர்கள் 29 பேர் மீது 191 குழந்தைகளை கொலை செய்ததாக நேற்றைய தினம் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “மதுரா கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிய ஒளரங்கசீப்” - ஆர்டிஐ கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்!