கென்யா: பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400-க்கு மேல் உயர்வு!

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
கென்யா
கென்யாTwitter

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல், குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம் இயங்கி வருகிறது. இதனை நிறுவியவர் பாதிரியார் பால் மெக்கன்சி நெதாங்கே. இவர் தனது பிரசங்கத்தின் போது, 'உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்து பிரார்த்தனை செய்பவர்கள்தான் இயேசுவை சந்திக்க முடியும்' என போதனை செய்துள்ளார். அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தது கடந்த ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து கென்யா நாட்டு போலீசார், போதகர் பால் மெக்கன்சி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வந்த ஷாகாஹோலா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கானோர் பிணமாக கிடந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

கென்யா
”உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காணலாம்..”- கென்யாவில் மத போதகரின் பேச்சை நம்பி பறிபோன 73 உயிர்கள்!
Paul Nthenge Mackenzie
Paul Nthenge Mackenzie

இதைதொடர்ந்து போதகர் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் வனப்பகுதியில் மொத்தமாக புதைத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதனையடுத்து, போலீசார் அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் நேற்று மேலும் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் பாதிரியாரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில் பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர் எனப் போலீசார் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் போதகர் மெக்கன்சி, அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 16 பேரும் உண்ணாவிரதம் இருப்பவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விடக்கூடாது என்பதிலும் அவர்கள் இந்த இடத்தை விட்டு உயிருடன் வெளியேறக்கூடாது என்பதிலும் குறியாக இருந்து செயல்பட்டிருக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மதப் போதகராக மாறுவதற்கு முன்பு பால் மெக்கன்சி டாக்ஸி டிரைவராக இருந்து வந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போதகர் பால் மெக்கன்சி பயங்கரவாதம் அல்லது இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

உண்ணாவிரதம் மேற்கொண்டு மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 50 மில்லியன் மக்கள் வசிக்கும் கென்யா நாட்டில் 4,000க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com