காஷ்யப் பட்டேல் pt web
உலகம்

“எதிரிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஒழித்துக்கட்டுவோம்” FBI இயக்குநராக காஷ்யப் பட்டேல்

அமெரிக்காவின் எதிரிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒழித்துக்கட்டுவோம் என்ற உறுதிமொழியுடன் FBI இயக்குநராக பதவியேற்றுள்ளார் காஷ்யப் பட்டேல். இவரது பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்..

PT WEB

காஷ்யப் பட்டேலை FBI இயக்குநராக பரிந்துரைக்கிறேன் என, அதிபராகும் முன்பே அறிவித்தார் ட்ரம்ப். இது அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்களே கூட இது சரியாக வருமா என பதற்றமடைந்தனர். ஆபத்தான தேர்வு என்றும் விமர்சனங்கள் எழுந்தன. FBI என்பது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிகமிக முக்கியமான அமைப்பு என்பதுதான் இதற்கு காரணம்.

ட்ரம்ப்பின் அதி தீவிர விசுவாசிகளில் ஒருவரான காஷ்யப் பட்டேல், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். புலனாய்வுப்புலி, பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். அரசு நடைமுறைகள் குறித்து காட்டமாக விமர்சித்தவர். குறிப்பாக வாஷிங்டனில் உள்ள FBI தலைமை அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு மறுநாள் அதை அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் என வலியுறுத்தியவர். இதனால்தான் FBIயின் கட்டுப்பாடு காஷ்யப் கையில் சென்றது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத்தி பெற்றோருக்கு நியூயார்க்கில் பிறந்தவர் காஷ்யப் பட்டேல். நல்ல காவலர்களை மட்டுமே காவலர்களாக தொடர அனுமதிப்பேன். FBI மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவேன் என ரத்தினச்சுருக்கமாக கூறியுள்ளார். தனக்கான பதவி உறுதியானதும் இந்திய பாரம்பரியப்படி தன் பெற்றோரை தலை குனிந்து வணங்கிய காஷ்யப் பட்டேல், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா எனக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

எந்த FBI அமைப்பை மூடவேண்டும் என காஷ்யப் பட்டேல் அதிரடியாக கூறினாரோ, அதே FBIயின் தலைமைப்பொறுப்பு அவரை தேடி வந்துள்ளது காலத்தின் நகைமுரண்களில் ஒன்று.