gaza war image afp, linked in
உலகம்

பட்டினியால் உயிரைவிடும் காஸா மக்கள்.. உணவுக்காக கேமராவை விற்பனை செய்யும் பத்திரிகையாளர்!

தி நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ் மற்றும் ஏபிசி நியூஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

gaza

மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூடக் கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது. காஸாவில் கிட்டத்தட்ட 4,70,000 மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கித் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின்படி, காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் பல நாட்களாக உணவு இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, காஸா பகுதி முழுவதும் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இது பொதுமக்களை மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களையும் பாதிக்கிறது.

அதேநேரத்தில், நூற்றுக்கணக்கான லாரிகள் நிறைய உதவிகள் விநியோகிக்க எல்லையில் காத்திருப்பதாக இஸ்ரேல் கூறினாலும், அணுகல் மற்றும் ஒருங்கிணைப்பு முக்கியத் தடைகளாக இருப்பதாக மனிதாபிமான வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், காஸாவில் உள்ள தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் சூடான உணவுகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் தினமும் 1 மில்லியனுக்கும் அதிகமான உணவுகளிலிருந்து இந்த மாதம் 1,60,000 ஆகக் குறைந்துள்ளது என்று ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளன.

press image

இந்த நிலையில், தி நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ் மற்றும் ஏபிசி நியூஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டுஇன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்புக் கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும்” என அதில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.