செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
மேற்கு ஆசியா பகுதியில் நீடிக்கும் பதற்றம் இன்று குறையும் நாளை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் மேலும் தீவிரம் அடைந்து பரபரப்பை அதிகரிக்கவே செய்கிறது.
இந்நிலையில், மேற்கு ஆசியாவில் அறிவிக்கப்பட்டிருந்த குறுகிய கால போர்நிறுத்தம் முற்றிலும் முறிந்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலை, அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பான CENTCOM அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் மிகப்பெரிய அளவில் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், ஈரானின் IRGC அதாவது இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கட்டளை மையங்கள், ஏவுகணை களஞ்சியங்கள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல முக்கிய ராணுவ இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அண்மைக் காலத்தில் அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு முன்பு, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு 'கடுமையான பதிலடி' கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக உலக எரிசக்தி சந்தையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், ஈரான் எல்லைப் பகுதிகளில் இடைவிடாத தாக்குதல்கள் நடைபெறுவதாக வெளியாகும் தகவல்கள், முழுமையான போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன.
மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் இந்தச் சூழ்நிலை, உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலவரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சர்வதேச நாடுகள் மிகுந்த கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகின்றன.