பல ஆண்டுகால மர்மம் தீர்ந்தது.. சூரியனைப் பற்றிய கணக்கு தவறா? விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அறிவுக்கெட்டாத ஆச்சரியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது நம் பிரபஞ்சம். நவீன தொழில்நுட்பம் மூலம் அறிவியல் அடுத்தடுத்த படிகளை எடுத்து வைக்கும்போது நம்ப முடியாத விசித்திரங்கள் மனுக்குலத்துக்கு கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒன்று மனித இனத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்ன தகவல்? முழுமையாக விளக்குகிறது இந்த தொகுப்பு...
பல ஆண்டுகளாக வானியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய சூரியன் குறித்த ஒரு மர்மத்திற்கு புதிய ஆய்வு விளக்கம் அளித்துள்ளது. இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில், சூரியனில் இருக்க வேண்டிய அளவை விட குறைவான வெள்ளி இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு, அந்த வெள்ளி சூரியனில் தொடர்ந்து இருந்ததாகவும், ஒளி செயல்படும் விதம் காரணமாக அதை விஞ்ஞானிகள் சரியாகக் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு Astronomy & Astrophysics என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சூரியனின் நிறையில் சுமார் 98.5 சதவீதம் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு தனிமங்களால் ஆனது. இருப்பினும், வெள்ளி போன்ற கனமான தனிமங்களை ஆய்வு செய்வது, நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்கள் எவ்வாறு உருவாகி வளர்ந்தன என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. வெள்ளி போன்ற தனிமங்கள் சக்திவாய்ந்த சூப்பர்நோவா வெடிப்புகளின் போது உருவாகின்றன என்று கருதப்படுகிறது.
பெல்ஜியத்தின் லீஜ் (Liege) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செமா கலிஸ்கன் (Sema Caliskan) தலைமையிலான குழு, வெவ்வேறு வகை மற்றும் வயதுடைய நட்சத்திரங்களின் ஒளியை ஆய்வு செய்து, பிரபஞ்சத்தில் வெள்ளி எவ்வாறு உருவாகிறது மற்றும் பால்வெளி மண்டலத்தில் எவ்வாறு பரவியது என்பதை அறிய முயன்றது.
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் உருவான அதே பொருட்களில் இருந்து உருவான பழமையான விண்கற்களில் காணப்படும் வெள்ளியின் அளவுடன் சூரியனிலும் அதே அளவு இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால், சூரிய ஒளி ஆய்வுகள் குறைவான வெள்ளி அளவையே காட்டின.
இந்த மர்மத்தைத் தீர்க்க, ஆய்வாளர்கள் ஸ்வீடனின் லிங்கோப்பிங் (Linkoping) நகரில் உள்ள சூப்பர் கணினியைப் பயன்படுத்தி வெள்ளி அணுக்களின் விரிவான கணினி மாதிரிகளை உருவாக்கினர். இதில் ஒளியை உறிஞ்சும் போது அணுக்களில் ஏற்படும் சிக்கலான இயற்பியல் விளைவுகளும் சேர்க்கப்பட்டன.
ஆய்வின் முடிவில், சூரியனில் முன்பு கணிக்கப்பட்டதை விட சுமார் 55 சதவீதம் அதிக வெள்ளி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. வெள்ளி உண்மையில் காணாமல் போகவில்லை; ஒளியின் இயற்பியல் செயல்பாடுகளால் அது மறைந்தது போலத் தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

