செய்தியாளர் சேஷகிரி
MAGA அதாவது make america great again என்ற முழக்கமே அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால், அதற்கான வழிமுறை ஆளுங்கட்சியாக வர உள்ள குடியரசு கட்சிக்குள் கடும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மீண்டும் உலக வல்லாதிக்க நாடாக மாற வெளிநாட்டு திறமைசாலிகளை பயன்படுத்திக்கொள்வது அவசியம் என ட்ரம்ப் அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்க உள்ள எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் கூறியுள்ளனர்.
குறிப்பாக, எந்த நாட்டவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் திறமைசாலிகளாக இருந்தால் அவர்களை அமெரிக்கா அரவணைக்கும் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய இது அவசியம் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் எலான் மஸ்க். இது சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளின் தேசம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், குடியரசு கட்சியின் அடிப்படை சித்தாந்தமே சுதேசி கொள்கை என்பதால் வெளிநாட்டவர்களை அரவணைக்க அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ட்ரம்ப்பின் ஏஐ ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்ததற்கு குடியரசு கட்சி ஆதரவாளரான லாரா லூமர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக நிக்கி ஹேலி போன்ற தலைவர்களும் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசின் அதிகாரம் குடியரசு கட்சிக்கு கைமாற உள்ள நிலையில் வெளிநாட்டு திறமைசாலிகளை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ட்ரம்ப் உள்ளார்.
அமெரிக்காவில் தொழில் துறையிலும் அரசியலிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெறும் நிலையில் அமெரிக்காவில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் கவனம் பெறுகின்றன. கட்சியினரின் நெருக்கடிகளுக்கு வரவிருக்கும் ட்ரம்ப் அரசு பணிந்தால் அது அமெரிக்க வேலை கனவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பாக அமையும். ட்ரம்ப் இன்னும் 3 வாரங்களில் அதிபர் நாற்காலியில் அமர உள்ள நிலையில் அவர் செல்லும் பாதை எப்படி இருக்கும் என்பது அமெரிக்கர்களை மட்டுமல்ல.. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.