ஜப்பான் ராக்கெட் எக்ஸ் தளம்
உலகம்

ஜப்பான் | விண்ணில் ஏவிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறிய ராக்கெட்.. 2வது முறையும் தோல்வி!

ஜப்பானில் இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட கெய்ரோஸ் ராக்கெட் அடுத்த சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

Prakash J

உலக நாடுகள் பலவும் இன்று போட்டிபோட்டு விண்ணில் ராக்கெட்களை ஏவி ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்தப் பணியில் ஜப்பானும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஒன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று (டிச.18) காலை 11 மணியளவில் வாகாயாமாவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் கீ தளத்திலிருந்து 5 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்ட கெய்ரோஸ் ராக்கெட்டை ஏவியது.

ஆனால், அது விண்ணில் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களிலேயே பூமியை நோக்கித் திரும்பியது. விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில விநாடிகளிலேயே கெய்ரோஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

18 மீட்டர்(59 அடி) நீள்முள்ளா இந்த ராக்கெட்டில், பூமியிலிருந்து 500 கி.மீ. தொலைவில் சூரியனை ஒட்டி நிலைநிறுத்தப்படுவதற்காக தைவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தைவானின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

சமீபத்திய ஏவுதலுக்காக சரிசெய்தல் செய்யப்பட்டதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், கைரோஸ் எண். 2 ராக்கெட் மீண்டும் அதன் நோக்கங்களை அடையத் தவறியது. முன்னதாக, இதே நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கெய்ரோஸ் என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்திய நிலையில், அந்த முயற்சியும் வெற்றியடையாமல் தோல்வியில் முடிந்தது.

கேனான் மற்றும் ஐஎச்ஐ ஏரோஸ்பேஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதரவுடன் 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்பேஸ் ஒன், ஜப்பானின் முதல் தனியார் செயற்கைக்கோள் ஏவுகணை வழங்குநராக தன்னை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2029ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 20 ஏவுகணைகளை ஏவுவதற்கு நிறுவனம் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த சமீபத்திய தோல்வி, உலகளாவிய நாடுகளிடமிருந்து அதிகரித்து வரும் போட்டிகளுக்கு மத்தியில், அதன் உள்நாட்டு விண்வெளித் துறையை மேம்படுத்துவதற்கான ஜப்பானின் முயற்சிகள் கவலையை எழுப்பியுள்ளது.