புரோபா-3 | சூரியனை நோக்க விண்ணில் சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று புரோபா - 3 செயற்கைகளை தாங்கிய பிஎஸ் எல்வி சி 59 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவின் ஒரு அங்கமான நியுஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஐரோப்பாவும் இஸ்ரோவும் இணைந்து சூரியனின் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக ‘புரோபா-3’ என்ற இரு இணை செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது.
புரோபா-3’ என்ற இந்த திட்டத்தில் உள்ள 2 செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதி மற்றும் சூரியனின் வளிமண்டலமான கொரோனாவை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டு நேற்று செலுத்தப்பட விருந்த ராக்கெட்டானது, புரோபா 3 செயற்கைக்கோளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு இன்று மாலை 4 மணி 04 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்த இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
திட்டமிட்டப்படி இன்று மாலை 4 மணி 04 நிமிடத்திற்கு ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ‘புரோபா-3’ செயற்கோளை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது பிஎஸ் எல்வி சி 59.
இனி வரும் காலத்தில், இரு செயற்கைக்கோளும் பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றியப்படி, செயற்கை கிரகணத்தை உருவாக்கி சூரிய கதிர்களையும் சூரியகரோணாவையும் ஆய்வு செய்யும்.