அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் கடந்த 22ஆம் தேதி கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாடு (CPAC) நடைபெற்றது. இதில் உரையாற்றிய இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, “வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அவர்கள் கைகோர்ப்பதால் இடதுசாரிகள் பதற்றமாக உள்ளனர். உலகெங்கிலும் உள்ள வலதுசாரி தலைவர்கள் சர்வதேச பிரச்னைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது இடதுசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.
தற்போது ட்ரம்பின் வெற்றியால் அவர்களின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. 1990-களில் பில் கிளின்டனும் டோனி பிளேயர் இணைந்து உலக அளவிலான இடதுசாரி தாராள அமைப்பை உருவாக்கியபோது, அவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் என அழைக்கப்பட்டனர். ஆனால், இப்போது நான், ட்ரம்ப், ஜேவியர் மைலி (அர்ஜென்டினா அதிபர்) அல்லது மோடி பேசினால், அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்று கூறுகிறார்கள்.
இப்படி இடதுசாரிகள் இரண்டு நிலையாக பேசுவது எங்களுக்கு பழகிவிட்டது. அனைத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால், என்னதான் இவர்கள் எங்கள் மீது சேற்றை அள்ளி வீசினாலும், மக்கள் அவர்களை நம்பப்போவதில்லை. நாங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறோம். நாங்கள் தேசத்தை நேசிக்கிறோம். பாதுகாப்பான எல்லைகள் எங்களுக்கு வேண்டும்.
இடதுசாரிகளிடம் இருந்து வர்த்தகத்தையும், குடிமக்களையும் நாங்கள் பாதுகாக்கிறோம். சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்கிறோம். குடும்ப வாழ்க்கையை நாங்கள் பாதுகாக்கிறோம். இதனால், எங்கள் போராட்டம் கடினமானது; ஆனால் தேர்வு எளிதானது” என அவர் தெரிவித்துள்ளார்.