எலான் மஸ்க் உடனான நட்பை உறுதிபடுத்திய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி! ஆனால்...?
எலான் மஸ்க்குடனான நட்பு சர்ச்சைக்குள்ளான நிலையில்
தாம் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என
பதிலளித்துள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
2022இல் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி அந்நாட்டின் பிரதமரான பிறகு அவரும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எலான்
மஸ்க்கும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
இதனால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நட்பைப் பேணுவதாகச் சர்ச்சை எழுந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இத்தாலியில் செயல்பட அனுமதிக்கும் திட்டத்துக்கு மெலோனி அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் இத்தாலிக்கு 7.3 பில்லியன் யூரோ மதிப்பிலான முதலீடுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் மெலோனி- மஸ்க் நட்பு விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில்(BRUSSELS) நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய
உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வழக்கமாக நடைபெறும் இத்தாலிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய மெலோனி மஸ்குடனான நட்பை உறுதிபடுத்தியுள்ளார். எலான் மஸ்க் தமது நண்பர் தான் என்றும் ஆனால் விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை தம் தலைமையிலான அரசுதான் முதல் முறையாக நிறைவேற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தமக்கு பலருடன்
நல்லுறவு உள்ளதெனவும், ஆனால் யாருடைய உத்தரவுக்கும் தாம்
கட்டுப்பட்டவர் அல்ல என்றும் மெலோனி விளக்கமளித்துள்ளார்.