ட்ரம்ப், நெதன்யாகு pt web
உலகம்

காசா | ஒன்று சேரும் உலகம்.. தனிமைப்படுத்தப்படும் அமெரிக்கா, இஸ்ரேல்.. என்ன நடக்கிறது மேற்கு கரையில்?

கா பகுதி இப்போது உலக கவனத்தின் மையமாக மாறியுள்ளது. ஐநா உறுப்புநாடுகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பதால், சர்வதேச தேச அளவில் இஸ்ரேல் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.

PT digital Desk

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காஸா புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,344 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இது தொடர்பாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,344 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

தொடர் தாக்குதல்களால் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் கொல்லப்படுவது உலக மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்ததை அமல்படுத்தக்கோரி இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. செப்டம்பர் 22 அன்று, நேற்று, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாலஸ்தீன் குறித்த உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டம் இருநாட்டுத் தீர்வை மையமாகக் கொண்டே நடைபெற்றிருக்கிறது. இக்கூட்டத்தின் மூலம், ஐ.நா., தனது பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர தனது அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், கனடா, பெல்ஜியம், லக்சம்பெர்க், மால்டா, மொனாக்கோ போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன. இது, குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்தியில், ஒரு முக்கியமான மாற்றத்தை குறிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக இங்கிலாந்து அரசாங்கம், மேற்குக் கரை மற்றும் காசாவை "ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள்" என்று குறிப்பிட்டு வந்த நிலையில் அதை "பாலஸ்தீனம்" என்று மாற்றி அழைக்கிறது. மேலும் அதன் வலைத்தளம் முழுவதும் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போதுவரை 193 ஐநா உறுப்பு நாடுகளில் சுமார் 150 நாடுகள் பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன் வெளியுறவு அமைச்சகம், பாலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரித்த பிரான்சின் முடிவை வரவேற்று இருக்கிறது. “வரலாற்றுச் சிறப்புமிக்க, தைரியமான முடிவு”  என்றும் “அமைதியை நிலைநிறுத்துவதற்கும், இரு-நாடுகளுக்கு இடையே சமாதானத்தை எட்டுவதற்கான முயற்சிக்கும் ஆதரவாக இருக்கும்” எனவும் தெரிவித்திருக்கிறது.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ், இரு-நாட்டு தீர்விற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். பாலஸ்தீனியர்களுக்கான தனிநாடு என்பது அவர்கள் உரிமை என்றும், அது பரிசோ அல்லது வெகுமதியோ அல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த பொதுச்சபை கூட்டத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் பங்கேற்கவில்லை. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஐநா சபை உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், அங்கீகரிக்காத நாடுகளின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அந்நாடுகளின் வரிசையில் கிட்டத்தட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என சில நாடுகள் மட்டுமே இருக்கிறதென சொல்லலாம். இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தை விமர்சித்திருக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரிப்பது என்பது பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை அளிப்பது போன்றது என்றும் பாலஸ்தீன் தனிநாடாக ஆவது என்பது நடக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

காசாவில் தொடர் போரின் பின்னணியில், உலக நாடுகள் பலவும் பாலஸ்தீனை தனிநாடாக அங்கீகரித்து, இரு-நாட்டுத் தீர்வுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச அழுத்தமும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே நிலையான அமைதியை உருவாக்கும் முயற்சியாகும். போர், வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில், சர்வதேச சமுதாயத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மட்டுமே நிலைமையை மாற்றி, இரு சமூகங்களுக்கும் நீண்டகாலத்தில் பாதுகாப்பும், சமாதானமும் கொண்டுவர முடியும் என்பது தெளிவாகிறது.