அமெரிக்காவுடனான போர் தொடங்கியவுடன் ஈரான் உலக எண்ணெய் வணிகத்தின் இதயமான ஹர்மூஸ் நீரிணையை மூடியது. அதன் பின்னர் அந்த பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கப்பல்கள் செல்வதைத் தடுப்போம் என்றும் கூறியிருந்தது. இந்த சூழலில், ஹர்மூஸ் நீரிணையில் இஸ்ரேலிய நிறுவனத்துக்கு சொந்தமான 'MSC Ishika’ என்ற ஒரு சரக்குக் கப்பல் சென்று கொண்டிருந்துள்ளது. இந்த கப்பலின் இருப்பிடத்தை கண்டறிந்த ஈரானின் ராணுவம், ட்ரோன் மூலம் அந்த கப்பலின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பல் தீப்பிடித்த நிலையில், அதிலிருந்த பணியாளர்கள் உயிர் காக்கும் படகுகள் (Lifeboats) மூலம் வெளியேறினர். ஆனால் பலர் கப்பலின் உள்ளே சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.
இஸ்ரேலியக் கொடி ஏந்திய அல்லது இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகத் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து ஈரான் இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைத் குறிப்பிட்டு இஸ்ரேலியக் கப்பல்கள் மீதான தாக்குதல் பொறுத்துக்கொள்ளப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் கப்பல் தீப்பிடித்து எரிந்துவரும் நிலையில், ஹர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக முடங்கியுள்ளது.