நெதன்யாகு முகநூல்
உலகம்

பிரதமர் நெதன்யாகுவுக்கு நடைபெற்ற ஆபரேஷன்.. சோகத்தில் இஸ்ரேல் மக்கள்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில், ப்ராஸ்டேட் சுரப்பி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Prakash J

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில், ப்ராஸ்டேட் சுரப்பி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக, ப்ராஸ்டேட் சுரப்பி விரிவடைந்ததாகவும், அதன் காரணமாக, தற்போது அந்த சுரப்பி அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவரும் பிரதமர் நெதன்யாகுவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.

இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது.

israel hamas war

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.