காசா மக்கள் முகநூல்
உலகம்

நிவாரணம் முகாமை நோக்கி வந்த காஸா மக்கள்... சுட்டுக்கொன்ற இஸ்ரேல்..!

காசாவில் நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்த அப்பாவி பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இதில், 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், அக்டோபர் 9, 2023 ஆம் தேதி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காசாவுக்கு அனுப்பப்படும் உணவு, உடை, எரிபொருள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

அன்று தொடங்கி இன்று வரைக்கும் , ‘ மின்சாரம், உணவு, எரிபொருள் என எந்தவொரு அடிப்படை தேவையும் இல்லாமல் தவித்து வருகின்றனர் பாலஸ்தீனர்கள். 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். காசாவில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் பற்றாக்குறையால் தவிப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 2 லட்சம் மக்கள் தங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாலும், உயிருக்கு பயந்து தங்கள் குழந்தைகளுடன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகிறார்கள்.

இதிலிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் காசாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற நினைத்தால் காசாவிற்கு வடக்கே உள்ள எரிஸ் கடல் எல்லையை காலவரையின்றி மூடியுள்ளனர். அதை மீறீயும் வெளியேற வேண்டுமெனில், அனுமதி வாங்க வேண்டுமென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த போராட்டம், ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்படி எதற்கும் வழியில்லாமல் அங்கு கிடைக்கும் நிவாரணங்களைக்கொண்டு மட்டுமே மக்கள் உயிர்ப்பிழைத்து வருகிறார்கள். ஆனால், அதுவும் எளிதாய் கிடைப்பதில்லை.

போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. அத்துடன், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது. இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.

அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

இந்தநிலையில்தான், பசியால் தவித்து வாடும் பாலஸ்தீனிய மக்களுக்கு உணவு போன்ற நிவாரண உதவிகளை செய்ய ராஃபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையம் ஒன்று அங்கு செயல்பட்டுவருகிறது.

உயிர்வாழ அந்த ஒருவேளை உணவையாவது வாங்கிவிடலாம் என்று வலிநிறைந்த கனவுகளோடு அந்த மையத்தை நோக்கி, கடந்த செவ்வாய் கிழமையன்று, சென்று கொண்டிருந்த 27 பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர துப்பாக்கிசூடு நடத்தியிருக்கிறது.

கடந்த 3 நாள்களில் நிவாரண முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியது இது இரண்டாவது முறையாகும்.

காஸா இதுகுறித்து தெரிவிக்கையில், இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினியால் தவித்துவரும் பாலஸ்தீனா்களை உணவுப் பொருள் ஆசை காட்டி அழைத்து, பின்னா் அவா்களை படுகொலை செய்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் மீது காஸா அரசின் ஊடகத் தொடா்பு அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அளித்த விளக்கத்தில், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும், நிவாரண முகாமுக்கு எந்த வழியாக வர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் அதைக் கேட்காமல் முன்னேறி வருவோரை நோக்கிதான் படையினா் துப்பாக்கியால் சுடுகிறாா்கள் என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.