Netanyahu & Mohammed bin Salman reuters
உலகம்

சவூதிக்கு ஆதரவாகக் களமிறங்கும் இஸ்ரேல்..? நெதன்யாகு போட்ட மெகா பிளான்!

இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்குமே ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஹவுதி ஆயுதக்குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

PT WEB

செய்தியாளர்: எம்.மீரா

சவூதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள, அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் சவூதிக்கு ராணுவ ரீதியாக உதவ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வந்துள்ளார்.

ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் சவூதியின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தீவிர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சவூதிக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலும் களமிறங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹவுதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலும் இணைவதற்கு சவூதி அரேபியாவின் அனுமதியைக் கோரியுள்ளதாக இஸ்ரேலின் Haaretz செய்தி வெளியிட்டுள்ளது.

Benjamin Netanyahu

இருப்பினும், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் (MBS) இந்த நேரடி ராணுவ உதவியை தற்போதைக்கு நிராகரித்துள்ளார் என்றும் அச்செய்தி கூறுகிறது.

நெதன்யாகுவின் முதன்மையான நோக்கம் சவூதி அரேபியாவுடன் முறையான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதாகும். தற்போது இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தூதரக உறவு இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னெடுத்த 'ஆபிரகாம் உடன்படிக்கை' (Abraham Accords) மூலம் சவூதியை இஸ்ரேலுடன் இணைக்க நெதன்யாகு நீண்ட நாட்களாக முயன்று வருகிறார்.

பாலஸ்தீனர்களுக்கான தனிநாடு அமைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்பது சவூதி அரேபியாவின் நீண்டகால நிலைப்பாடாகும்.

Mohammed Bin salman

இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்குமே ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஹவுதி ஆயுதக்குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டாப் (Bab al-Mandab) கடல் பகுதியில் ஹவுதிகள் ஏற்படுத்தும் கடல்சார் முற்றுகையை உடைத்து, சர்வதேச வர்த்தகப் பாதையையும், சவூதியின் எண்ணெய் ஏற்றுமதியையும் பாதுகாப்பதில் இஸ்ரேலின் பாதுகாப்பு உத்திகளைப் பயன்படுத்த நெதன்யாகு விரும்புகிறார்.

இந்த ஆபத்தான நேரத்தில், சவூதிக்கு ராணுவ உதவி வழங்குவதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்குப் பாதையை எளிதாக்கலாம் என நெதன்யாகு திட்டமிடுகிறார் எனவும் கூறப்படுகிறது.

சவூதிக்கு ராணுவ உதவி வழங்குவது மட்டுமே நெதன்யாகுவின் நோக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்துவதற்கான பாதையை உருவாக்குவதும் இந்த முயற்சியின் நோக்கங்களாக இருக்கலாம் என்று Haaretz செய்தி தெரிவித்துள்ளது.