ஈரான் மீது அதிபயங்கர தாக்குதல் முகநூல்
உலகம்

ஈரான் மீது அதிபயங்கர தாக்குதல் நடக்க வாய்ப்பு..!

அமெரிக்கா அதிநவீன போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை மத்திய கிழக்கில் குவிக்க, இஸ்ரேல் வான்படை முழுமையான தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் ஈரான் மீது பெரியளவில் தாக்குதல்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

PT WEB

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்களுக்கு மத்தியில், அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு புதிய போர் விமானங்களையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

F-16, F- 22, F-35 போன்ற நவீன போர் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், கண்காணிப்பு அமைப்புகளில் சிக்காமல் இயங்க உதவும் சிறப்பு தொழில்நுட்ப இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் USS NIMITZ எனும் பெரும் விமானந்தாங்கி போர்க் கப்பலும், USS THOMAS HUDNER உள்ளிட்ட நவீன ராணுவ கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் கூறியுள்ளது. இது ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் இஸ்ரேல் - ஈரான் மோதலில், அமெரிக்காவின் நேரடி பங்கு இருப்பதைக் காட்டுகிறது. மேலும் ஈரானில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு அமெரிக்கா உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, F-15 EAGLE போர் விமானம் மூலம் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கியதைக் காட்டும் வீடியோ காட்சியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதனுடன், ஈரானால் ஏவப்பட்ட ஒரு ட்ரோனை, ஏவுகணை மூலம் இடைமறித்து அழிக்கும் மற்றொரு காட்சியும் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் மேலும் பெரிய ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா நேரடி மோதலுக்கு வாய்ப்பு ஏற்படலாம் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமைதி அழைப்புகளை விடுத்துள்ளன.