காஸா, பெஞ்சமின் நெதன்யாகு x page
உலகம்

”இன்னும் கொஞ்சம்தான்..” காஸாவின் அடுத்தகட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அதிரடி!

”காஸாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய கால அட்டவணையே உள்ளது” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.

காஸா

காஸாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காஸாவில், மேலும் நிம்மதியற்ற சூழலை உருவாக்கும் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காஸா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கிய ஐந்து இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. ஹமாஸின் ஆயுதங்களை அகற்றுவது, அனைத்து பிணை கைதிகளையும் விடுதலை செய்வது, காசாவில் ஆயுதமில்லா மண்டலமாக மாற்றுதல், இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவது மற்றும் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன் நிர்வாகம் சாராத புதிய நிர்வாகத்தை அமைத்தல் என ஐந்து முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் காசா நகரில் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்யும் அபாயம் உள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், இஸ்ரேலின் முழு பாதுகாப்புக் குழுவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் கண்டனங்களையும், இஸ்ரேல் ராணுவத் தலைமைத்துவத்தின் சில எதிர்ப்புகளையும் புறக்கணித்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ’காஸா நகரை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவில்லை, ஹமாஸிலிருந்து விடுவித்து அமைதியான குடிமை நிர்வாகத்தை உருவாக்க உதவுவதே இலக்கு’ என்று தெரிவித்தார். எனினும், இஸ்ரேலின் திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெதன்யாகு

இந்த நிலையில் இதுதொடர்பாக மீண்டும் பேசியுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, ” இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்டனம் அதிகரித்து வருகிறது. இது, ஓர் உலகளாவிய பொய் பிரசாரம். வேலையை முடித்து ஹமாஸின் தோல்வியை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் இலக்கு காஸாவை ஆக்கிரமிப்பதல்ல, அதை விடுவிப்பதாகும். அத்துடன், காஸாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய கால அட்டவணையே உள்ளது. அங்குள்ள இலக்குகளில், காஸாவை ராணுவமயமாக்குதல், இஸ்ரேலிய ராணுவம் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் இஸ்ரேலியர் அல்லாத சிவில் நிர்வாகம் ஆகியவை இதில் அடங்கும். காஸாவின் பல பிரச்னைகளுக்கு ஹமாஸ் போராளி குழுதான் முக்கியக் காரணம். காஸா பகுதியில் உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.