இஸ்ரேல் நாட்டில் பிரதமர் நெதன்யாகு ஆட்சி தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என்பதை தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 120 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். யாஷார் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் ராணுவத்தளபதியுமான காடி ஐசன்கோட் (GADI EISENKOT), நெதன்யாகுவிற்கு பிரதான போட்டியாளராக உள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரானுடனான இஸ்ரேலின் அணுகுமுறைகளையும் விலைவாசி உயர்வையும் மையமாக வைத்தே இத்தேர்தலில் இரு தரப்பும் பரப்புரை மேற்கொண்டுள்ளன. எனினும் பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் நெதன்யாகு வைத்துள்ள அதே கடும்போக்கையே காடி ஐசன்கோட்டும் வைத்துள்ளதால் இவர் வென்றாலும்கூட காஸாவில் மாற்றம் வர வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
இவர்கள் தவிர டுகெதர் கட்சியின் நஃப்தாலி பென்னட் (NAFTALI BENNETT), முன்னாள் பிரதமர் யாயிர் லபிட் (YAYIR LAPID), ஜனநாயகக்கட்சியின் யாயிர் கோலன் (YAYIR GOLAN), ஆகியோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இஸ்ரேல் தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர்களுக்கு அல்லாமல் கட்சிகளுக்குத்தான் மக்கள் வாக்களிக்க உள்ளனர். கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்படும். 61 இடங்களில் வெல்பவர்கள் ஆட்சியமைக்கலாம். வழக்கம்போல இம்முறையும் கூட்டணி ஆட்சியே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கணிப்புகளில் ஐசன்கோட் முன்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் பிரதமர் நெதன்யாகுவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவளித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் முடிவு மேற்காசியாவில் நிலவும் பதற்ற சூழலிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலகளவில் கவனம் ஈர்க்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது